×

மும்பை மாநகராட்சி தேர்தல்: உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே கூட்டணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது; பட்னாவிஸ்

 

மும்பை: மும்பை மாநகராட்சி தேர்தலில் உத்தவ் தாக்கரே, ராஜ்தாக்கரே ஆகியோர் கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அதிரடியாக அறிவித்து உள்ளனர். மகாராஷ்டிரா மாநிலத்தில் கடந்தாண்டு நடந்த சட்டசபை தேர்தலுக்கு பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. குறிப்பாக 20 ஆண்டுகள் பகையை மறந்து உத்தவ் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே, நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே கைகோர்த்த சம்பவம் பரபரப்பாக பேசப்பட்டது. சிவசேனா நிறுவனர் பால்தாக்கரேயின் மகன் உத்தவ் தாக்கரே. பால்தாக்கரேயின் அண்ணன் மகன் ராஜ்தாக்கரே. சிவசேனாவில் உத்தவ் தாக்கரேக்கு பால்தாக்கரே முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியதால், கடந்த 2005ம் ஆண்டு சிவசேனாவில் இருந்து ராஜ்தாக்கரே விலகினார்.

அன்று முதல் உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ்தாக்கரே அரசியலில் பரம எதிரியாக மாறினர். ஆனால் திடீர் திருப்பமாக அவர்கள் கடந்த சில மாதங்களுக்கு முன் அரசியலில் கைகோர்த்தனர். இந்நிலையில் அடுத்த மாதம் 15ம் தேதி நடைபெற உள்ள மும்பை மாநகராட்சி தேர்தலில் கூட்டணி வைத்து போட்டியிட இருப்பதாக அந்த இரு கட்சிகளின் தலைவர்களும் நேற்று கூட்டாக தெரிவித்தனர். இது தொடர்பாக நிருபர்களை சந்தித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டனர். மண்ணின் மைந்தர் கொள்கையை கடைப்பிடித்து வரும் இரு கட்சிகளும் கூட்டணி வைத்து போட்டியிடுவதாக அறிவித்திருப்பது மகாராஷ்டிரா அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

அதே நேரத்தில் தாக்கரே சகோதரர்களின் கூட்டணி எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும், தங்கள் அரசியல் இருப்பை தக்கவைத்து கொள்வதற்காகவே இந்த இரு கட்சிகளும் இணைந்துள்ளன. இந்த கூட்டணியால் எந்த பெரிய மாற்றமும் ஏற்படப்போவதில்லை” என்று முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் கூறியுள்ளார்.

Tags : Mumbai Municipal Election ,Uddhav Thackeray ,Rajtakare ,Budnawis ,Mumbai ,Mumbai municipal elections ,Maharashtra ,
× RELATED 5 மாநிலங்களில் காலியாகும் 75 மாநிலங்களவை இடங்கள்