சிறப்பு தீவிர திருத்த படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாத 10 லட்சம் வாக்காளர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 10 லட்சம் வாக்காளர்களும் நேரில் ஆஜராகி ஆவணங்களை சமர்ப்பிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. கணக்கிட்டு படிவங்களை முழுமையான தகவல் அளிக்காத 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. 10 லட்சம் பேரும் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை அமல்படுத்திய நிலையில் கிட்டத்தட்ட 97 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தனர். இந்த நிலையில் வாக்காளர் பட்டியலில் தற்போது பெயர் இடம் பெற்றிருக்கும் 10 லட்சம் பேர் தவறான தகவல் அளித்துள்ளதாகவும், அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது. ஒரு வேலை தவறான பதிவு என நிரூபிக்கப்பட்டால் அவர்கள் வாக்களிக்க முடியாமல் போகும் என்பது குறிப்பிடத்தக்கது.
2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு இந்திய தேர்தல் ஆணையத்தின் மூலம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) மேற்கொள்ளப்பட்டது. இந்த பணிகள் கடந்த நவம்பர் 4ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 14ஆம் தேதியுடன் முடிந்தது. இந்த காலத்தில் இறந்தவர்கள், இரண்டு இடங்களில் பெயர் வந்தவர்கள், அடையாளத்தை உறுதி செய்ய முடியாதவர்கள், நிரந்தரமாக வேறு இடத்துக்குப் போனவர்கள் போன்றோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன. இதன் மூலம், தமிழகத்தில் மட்டும் சுமார் 97 லட்சம் பேர் வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள் மீண்டும் தங்கள் பெயரை சேர்க்கலாம் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதற்காக சென்னை உள்ளிட்ட நகரங்களில் தினந்தோறும் முகாம்களும், மற்ற மாவட்டங்களில் வார இறுதிகளில் சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் தான் இப்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. SIR படிவங்களில் சரியாக விவரங்களை நிரப்பாத சுமார் 10 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்ப முடிவு செய்துள்ளது. குறிப்பாக 2002 அல்லது 2005ஆம் ஆண்டுகளில் தங்களது பெயர் அல்லது உறவினர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து இருந்தால், அந்த விவரம் படிவத்தில் சொல்ல வேண்டும் என்று முன்பே கூறப்பட்டிருந்தது.
ஆனால் பலர் அந்த தகவலைச் சேர்க்காமல் படிவத்தை நிரப்பியதாக கூறப்படுகிறது. இவர்களில் சிலரின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன. இதனால், இப்போதும் தங்களது அடையாளத்தை நிரூபிக்க வாய்ப்பு அளிக்க தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
மாவட்ட தேர்தல் அலுவலகங்களிலிருந்து தபால் மூலம் நோட்டீஸ் அனுப்பப்படும். அந்த நோட்டீஸ் வந்தவர்கள் 13 வகையான ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை சமர்ப்பித்து தாங்கள் உண்மையான வாக்காளர் என்பதை நிரூபிக்கலாம். இதில் நேட்டிவிட்டி சர்டிபிகேட் (பிறந்த ஊர் சான்றிதழ்), நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் போன்றவையும் அடங்கும்.
இந்த நிலையில் வாக்காளர்களுக்கு சிரமம் வராதபடி தமிழக அரசும் உதவிக்கரம் நீட்டியுள்ளது. குறிப்பாக நிரந்தர குடியிருப்பு சான்றிதழ் விரைவாக கிடைக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு வருவாய் துறை செயலாளர் அமுதா உத்தரவு பிறப்பித்துள்ளார். ஆன்லைனில் விண்ணப்பித்தால் தாமதமும், கட்டணமும் இருக்கும் நிலையில், தேர்தல் ஆணைய நோட்டீஸ் காரணமாக விண்ணப்பிக்கும் வாக்காளர்கள் கட்டணம் இல்லாமல் சான்றிதழ் பெறலாம் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் SIR படிவம் தொடர்பாக வேண்டிய பிற சான்றிதழ்களும் கட்டணமின்றி வழங்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதாவது, வாக்காளர் பட்டியலில் தவறுதலாக பெயர் நீக்கப்பட்டவர்கள் கவலைப்பட தேவையில்லை. நோட்டீஸ் வந்தால் உடனடியாக தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து விளக்கம் அளித்தாலே போதும். இல்லையென்றால், எதிர்காலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் நீங்கும் அபாயம் இருப்பதால், நோட்டீஸ் கிடைத்தவுடன் அதை புறக்கணிக்காமல் நடவடிக்கை எடுப்பது முக்கியம்.
