மதுரை: மதுரை வடக்கு மாவட்ட தவெக செயலாளரை நீக்க கோரி, அக்கட்சியின் மகளிர் அணியினர், இளைஞர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் மதுரை வடக்கு மாவட்ட செயலாளர் கல்லாணை. இவரை பதவி நீக்க கோரி மதுரை தபால் தந்தி நகரில் மகளிர் அணியை சேர்ந்த சத்யா தலைமையில் பெண்கள் மற்றும் இளைஞர்கள் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘மதுரை வடக்கு மாவட்ட தமிழக வெற்றி கழக செயலாளர் கல்லாணை, மக்கள் பணிக்கு என கூறி தவெகவினரிடம் ரூ.50 லட்சம் வரை பணம் வசூலித்துள்ளார். வட்ட செயலாளர் பதவிக்கு ரூ.5 லட்சம் வரை வசூலிக்கிறார்.
பெண்களின் உடல் பருமனை காட்டி ஏளனமாக பேசி வருகிறார். மதுரையில் மன்னராட்சி முறையில் தவெகவினர் கட்சியை செயல்படுத்தி வருகின்றனர். விஜய் பிறந்தநாளை மகளிர் அணியினர் கொண்டாடினர். அந்த பிறந்த நாளுக்கு பிரியாணி வழங்க வேண்டும் என மாவட்ட செயலாளர் கல்லாணை வற்புறுத்தி பணம் வசூலித்தார். பதவி வழங்க ஜாதி பார்க்கின்றனர். சமீபத்தில் 12 மகளிர் அணி பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர். அதில் யாருமே களப்பணி செய்தவர்கள் அல்ல. பணம் வசூலித்து கொண்டு பதவியை வழங்கியுள்ளனர். எனவே, மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து கல்லாணை நீக்க வேண்டும்’ என்றனர்.
மாவட்ட செயலாளரை நீக்க கோரி, மகளிர் அணியினரும், இளைஞர்களும் போராட்டம் நடத்தியது மதுரை தமிழக வெற்றி கழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நேற்று தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பதவி தர மறுத்ததால் சென்னை பனையூர் தவெக அலுவலகம் முன் அஜிதா ஆர்க்னஸ் என்ற பெண் நிர்வாகி கதறி அழுதார். அப்போது ஆதரவாளர்களுடன் விஜய்யின் காரை மறித்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் தவெகவில் பரபரப்பு அதிகரித்துள்ளது.
