- சமய உணவு விழா
- பெசன்ட் நகர் பீச்
- சென்னை
- சென்னை பெசன்ட் நகர்
- தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்
- பெசன்ட் நகர், சென்னை
சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்று வரும் மதி உணவுத் திருவிழா டிச.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகரில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மதி உணவுத் திருவிழா நடைபெறுகிறது. உணவுத் திருவிழா இன்றுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிச.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மகளிர் சுய உதவிக் குழுக்களின் வாழ்வாதாரத்தை மேலும் வளப்படுத்தும் நோக்கத்துடன் தமிழ்நாடு முதலமைச்சர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். தமிழ்நாடு துணை முதலமைச்சர் வழிகாட்டுதலின் கீழ் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சுய உதவிக் குழுக்கள் தயாரிக்கும் பொருட்களை விற்பனை செய்திட, மதி அங்காடி, மதி அனுபவ அங்காடி, மதி எக்ஸ்பிரஸ் மின் வாகனங்கள், மதி இணையதளம், மதி சிறுதானிய உணவகம், இயற்கைச் சந்தைகள் மற்றும் விற்பனைக் கண்காட்சிகள் என பல்வேறு செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மிகப்பெரிய உணவகங்களில் சமைக்கப்படும் எவ்வளவு உயர்ந்த விலையிலான உணவு என்றாலும், வீட்டில் பெண்களின் கைப்பக்குவத்தில் சமைக்கப்படும் உணவு வகைகளுக்கு ருசியிலும், தரத்திலும் ஈடுசெய்ய முடியாது. அத்தகைய பெண்கள் இணைந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் தயாரித்த உணவு பொருட்கள் மற்றும் உணவு வகைகளை அனைவரும் அறிந்திட வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்தின் வழிகாட்டுதலில் செயல்படும் சுய உதவிக் குழு மகளிர் தயாரிக்கும் உணவுகளை விற்பனை செய்யும் வகையில் உணவுத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன.
சென்னை மற்றும் மதுரையில் நடைபெற்ற உணவுத் திருவிழாக்களுக்க பொதுமக்கள் தந்த அபரிமிதமான ஆதரவைத் தொடர்ந்து, தமிழ்நாடு துணை முதலமைச்சர் , 21.12.2025 அன்று சென்னை, பெசன்ட் நகர் கடற்கரையில் மதி உணவுத் திருவிழாவினைத் தொடக்கி வைத்தார்.
மதி உணவுத் திருவிழாவில், சென்னை Street Food, செங்கல்பட்டு காய்கறி தோசை, கோயம்புத்தூர் கொங்கு மட்டன் பிரியாணி, கடலூர் மீன் புட்டு, காஞ்சிபுரம் கோவில் இட்லி, கரூர் தோல் ரொட்டி – மட்டன் கிரேவி, மதுரை கறி தோசை, நாமக்கல் பள்ளிப்பாளையம் சிக்கன், நீலகிரி கோத்தர் உணவு, ராமநாதபுரம் மீன் உணவுகள், ராணிப்பேட்டை ஆற்காடு பிரியாணி, சேலம் தட்டு வடை செட், தஞ்சாவூர் மட்டன் உணவுகள், திருவள்ளூர் நெய்தல் உணவுகள், தூத்துக்குடி இலங்கை யாழ் உணவுகள், திருநெல்வேலி நரிப்பயிறு பால், திருப்பத்தூர் ஆம்பூர் பிரியாணி, திருப்பூர் முட்டை ஊத்தாப்பம், திருச்சி வரகு மட்டன் பிரியாணி, திருவாரூர் பனை உணவுகள், விழுப்புரம் சிறுதானிய சிறப்பு உணவுகள், விருதுநகர் புரோட்டா, சாத்தூர் சேவு உள்ளிட்ட 235க்கும் மேற்பட்ட உணவு வகைகளை உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
சென்னை Street Food உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் பிரசித்திப் பெற்ற 235க்கும் மேற்பட்ட உணவு வகைகளை உடனடியாக சமைத்து, சுகாதாரமான முறையில் பரிமாறும் வகையில் 38 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மேலும், 12 அரங்குகளில் காஞ்சிபுரம் 20 வகையான முட்டை மிட்டாய்கள், கன்னியாகுமரி பலதரப்பட்ட சிப்ஸ் வகைகள், பெரம்பலூர் முத்து சோளம், நாமக்கல் புரதச் சத்து நிறைந்த முட்டை உணவுகள், ராமநாதபுரம் பனை மதிப்புக் கூட்டுப் பொருட்கள், நீலகிரி பாரம்பரிய தேநீர், சேலம் மளிகைப் பொருட்கள், சிவகங்கை செட்டிநாட்டுத் தின்பண்டங்கள், 90களில் (90s Kids) பிரசித்திப் பெற்ற 30 வகையான திருவள்ளூர் தின்பண்டங்கள் போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
மதி உணவுத் திருவிழா நடைபெறும் நாட்களில் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு உணவு வகைகளின் தரத்தை மேம்படுத்துவது, சுகாதாரமான முறையில் பரிமாறுவது, விற்பனை நுணுக்கங்கள், சந்தைப்படுத்துதலில் உள்ள சவால்களை எவ்வாறு களைவது போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
சென்னை மக்களின் அபரிமிதமான வரவேற்பின் காரணமாகவும், பள்ளி அரையாண்டுத் தேர்வு விடுமுறை, கிறிஸ்துமஸ் ஆகியவற்றை முன்னிட்டும் பெசன்ட் நகர் கடற்கரை மதி உணவுத் திருவிழா 28.12.2025 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்த மதி உணவுத் திருவிழாவிற்கு சென்னையில் உள்ள பொதுமக்கள், உணவு பிரியர்கள் தங்கள் குடும்பத்துடன் வருகை தந்து, உணவு வகைகளை ருசித்து, மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
