மூணாறு: மூணாறில் இரவில் வெப்பநிலை மைனஸ் 1 டிகிரி செல்சியஸாக குறைவதால், கடும் பனிப்பொழிவு ஏற்பட்டு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேயிலைச் செடிகள் கருகி வருவதால் விவசாயிகள், எஸ்டேட் கம்பெனி நிர்வாகங்கள் கவலை அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள மூணாறு, பிரசித்தி பெற்ற சுற்றுலாத் தலமாக திகழ்கிறது. தென்னிந்தியாவின் சுவிட்சர்லாந்து என அழைக்கப்படும் இங்கு சீசன் காலங்களில் உள்ளூர் சுற்றுலாப் பயணிகள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருகை தருகின்றனர்.
இந்தாண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் பரவலாக மழை பெய்ததால் உறைபனி குறைந்து அடர் பனிமூட்டம் நிலவியது. ஆனால், கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் வெப்பநிலை வெகுவாக குறைந்து கடுங்குளிர் வீசுகிறது. பகல் நேரத்தில் வெயில் சுட்டெரிக்கும் நிலையில், இரவில் பூஜ்ஜியம் மற்றும் மைனஸ் ஒரு டிகிரிக்கும் குறைவான வெப்பநிலை நிலவுகிறது.
இதனால், காலை நேரங்களில் புல்வெளிகளில் உறைபனி படர்கிறது. குறிப்பாக மூணாறுக்கு அருகில் உள்ள கன்னிமலை, சிவன்மலை, வட்டவடை, பாம்பாடும்சோலை, டாப் ஸ்டேஷன் உள்ளிட்ட இடங்களில் அதிகாலை நேரங்களில் மைனஸ் ஒரு டிகிரிக்கும் குறைவாக வெப்பநிலை நிலவுகிறது.
மூணாறில் நவம்பரில் குளிர்காலம் தொடங்கி டிசம்பர் மாத இறுதி முதல் பிப்ரவரி வரை உறைபனி காலமாக இருக்கும். இந்தாண்டு வழக்கத்தை விட முன்னதாகவே உறைபனி சீசன் தொடங்கியுள்ளது. கடந்த 2 நாட்களாக காலை நேரங்களில் வெப்பநிலை பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸாக உள்ளது. திறந்தவெளியில் நிறுத்தப்படும் வாகனங்கள் மீது பனி படர்ந்து உறைகிறது.
குண்டளை அணையில் நீரின் மேற்பரப்பில் படர்ந்திருக்கும் பனிப்படலம் காலை வெயில் வந்தவுடன் ஆவியாக மாறி வெளியேறுவது கண்கொள்ளாக் காட்சியாக திகழ்கிறது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக மூணாறுக்கு வருகை தந்துள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் உறைபனி சூழ்ந்த இயற்கை காட்சிகளை ரசித்து வருகின்ற்னர். அதே வேளையில் கடும் பனிப்பொழிவால் தேயிலைச் செடிகள் கருகி வருகிறது. இதனால், விவசாயிகள், கம்பெனி நிர்வாகங்கள் கவலை அடைந்துள்ளன. பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நீலகிரியில் பல்வேறு பகுதிகளிலும் உறை பனி கொட்டி வருகிறது. இன்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உறைபனி காணப்பட்டது. ஊட்டியில் தாவரவியல் பூங்கா, காந்தல், தலைக்குந்தா, எச்பிஎப், பைக்காரா, ஷூட்டிங் மட்டம், அவலாஞ்சி மற்றும் கிளன்மார்க்கென் போன்ற பகுதிகளில் உறைபனி விழுந்தது. புல்வெளிகள், வாகனங்களில் உறைபனி படர்ந்து காணப்பட்டது. ஊட்டியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியசாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 5 டிகிரி செல்சியசாகவும் பதிவாகியிருந்தது. பனியால் கடும் குளிர் நிலவியது.
