செங்கல்பட்டு, டிச.18: சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிக ஹாரன் எழுப்பும் வாகனங்களுக்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரிகள் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். பரனூர் சுங்கச்சாவடி அருகே சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அதிக ஒளி எழுப்பக்கூடிய வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து துறை சார்பாக மோட்டார் வாகன ஆய்வாளர் அமிதா பானு தலைமையில் அதிகாரிகள் திடீரென நேற்று காலை ஆய்வு மேற்கொண்டனர். செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தனியார் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் அதிக ஒலி எழுப்பக்கூடிய ஏர் ஹாரன் பொருத்தப்பட்டுள்ளதாகவும், இது பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதமாக இருப்பதாகவும் வந்த தொடர் புகார்கள் அடிப்படையில் இந்த சோதனை நடந்தது.
சோதனையின்போது திருச்சியில் இருந்து சென்னை மார்க்கமாக வரக்கூடிய தனியார் பேருந்து, லாரிகளை மடக்கி பிடித்து ஹாரன் அடிக்கச் சொல்லி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்களில் இருந்து அதிக சத்தம் எழுப்பக்கூடிய ஏர் ஹாரன்களை பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். மேலும் பொதுமக்களுக்கு அச்சுறுத்தக்கூடிய அதிக ஒலிப்பெருக்கிகளை பயன்படுத்தக் கூடாது, அதையும் மீறி பயன்படுத்தினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த ஆய்வின்போது செங்கல்பட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெயலட்சுமி, மதுராந்தகம் மோட்டார் வாகன ஆய்வாளர் ஜெய்கணேஷ் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
