×

பெரம்பலூரில் 10ம் வகுப்பு பயிலும் அரசு பள்ளி மாணவர்களுக்கு திறனாய்வு தேர்வு வரும் 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

பெரம்பலூர்,டிச.17: அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவியருக்கான- தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு எழுத வருகிற 26ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று பெரம்பலூர் மாவட்ட அரசுத் தேர்வுத் துறை உதவி இயக்குனர் கல்பனாத் ராய் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :
அரசுப் பள்ளிகளில் 2025- 2026 ஆம் கல்வி ஆண்டில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு வருகிற 2026 ஜனவரிமாதம் 31ம் தேதி சனிக்கிழமை நடைபெற உள்ளது. தமிழ்நாடு மாநில பாடத் திட்டத்தின் கீழ் 2025- 2026ம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் பத்தாம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த தேர்விற்கு விண்ணப்பிக்கலாம். இந்தத் தேர்வில் நடைமுறையில் உள்ள இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் 1000 மாணவர்கள் (500மாணவர், 500 மாணவிகள்) தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு உதவித் தொகையாக ஒரு கல்வி ஆண்டில் ரூ.10ஆயிரம் (ஒரு மாதத்திற்கு ரூ.1000 என) வழங்கப்படும்.

தமிழ்நாடு அரசின் 9 மற்றும் 10ம் வகுப்புகளில் கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் உள்ள பாடத்திட்டங்களின் அடிப்படையில், கொள்குறி வகையில் தேர்வு இரு தாள்களாக நடத்தப்படும். முதல் தாளில் கணிதம் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும். இரண்டாம் தாளில் அறிவியல் மற்றும் சமூக அறிவியல் தொடர்புடைய வினாக்கள் 60 இடம்பெறும். முதல் தாள் காலை 10 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், இரண்டாம் தாள் பிற்பகல் 2 மணி முதல் மாலை 4:00 மணி வரையிலும் நடைபெறும்.

மாணவர்கள் < http://www.dge.tn.gov.in/ > என்ற இணையதளத்தில் விண்ணப்ப படிவத்தினை வருகிற 18ம் தேதிமுதல் 26ம் தேதிவரை டவுன்லோட் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் தேர்வு கட்டணம் ரூ.50ஐ சேர்த்து, டிசம்பர் 26 ம் தேதிக்குள் மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளித் தலைமை ஆசிரியரிடம் விண்ணப்பப் படிவத்தை ஒப்படைக்க வேண்டும் என பெரம்பலூர் மாவட்ட அரசு தேர்வுத்துறை உதவி இயக்குனர் கல்பனாத் ராய் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Tags : Perambalur ,Tamil ,Nadu ,Kalpanathan Rai ,Assistant Director ,Government Examinations Department ,Perambalur District.… ,
× RELATED கரும்பு விவசாயி மீது தாக்குதல்; அரசு...