மதுரா: உபியில் பனி மூட்டத்தால் அடுத்தடுத்து நடந்த விபத்தில் 25 பேர் பலியானார்கள். இதில் மதுராவில் மட்டும் பஸ், கார்கள் தீப்பிடித்து 13 பேர் பலியாகினர். உத்தரபிரதேசம், டெல்லி, அரியானா உள்பட பல்வேறு வடமாநிலங்களிலும் கடும் பனி மூட்டம் காணப்படுகிறது. இதனால் எதிரில் வரும் வாகனங்கள் தெரியாமல் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள டெல்லி ஆக்ராவுக்கு இடையே செல்லும் யமுனா விரைவு சாலையில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு அர்ந்த மூடுபனி காணப்பட்டது. இதனால் சாலையில் வரும் வாகனங்கள் கண்களுக்கு தெரியவில்லை.
அப்போது நொய்டா பகுதியில் பல்தேவ் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சென்று கொண்டிருந்த 7 பேருந்துகளும், 3 கார்களும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகின. இதில் பேருந்துகளும், கார்களும் தீப்பிடித்து எரிந்தன. இந்த பயங்கர விபத்தில் பேருந்து பயணிகள் மற்றும் காரில் சென்றவர்கள் உள்பட 13 பேர் தீயில் கருகி உயிரிழந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தினர். தொடர்ந்து விபத்தில் 35 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதே போல் பஸ்தி மற்றும் உன்னாவோவில் தலா 4 பேரும், மீரட் மற்றும் பாராபங்கியில் தலா 2 பேரும் உயிரிழந்தனர். இந்த விபத்துகளில் பலியானவர்களுக்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் இரங்கல் தெரிவித்ததுடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000மும் நிதியுதவி அறிவித்தார்.
* டெல்லியில் 131 விமானங்கள் ரத்து
பனி மூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் விமானச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டன. இதன் காரணமாக விமான நிறுவனங்கள் 131 விமானங்களை ரத்து செய்துள்ளன என்று டெல்லி சர்வதேச விமான நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
