ஈரோடு: ஈரோட்டில் நாளை மறுநாள் நடைபெற உள்ள விஜய பிரசார கூட்டத்தில் விளம்பர பலகைகள் மீது தொண்டர்கள் ஏறுவதை சமாளிக்க முள்கம்பி வேலி அமைக்கப்படும் என செங்கோட்டையன் கூறினார். ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் அருகே தவெக தலைவர் விஜய் நாளை மறுதினம்(18ம் தேதி) பிரசார கூட்டத்தில் பங்கேற்கிறார். இந்த கூட்டத்திற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து ஈரோட்டில் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கட்சியின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தலைமை தாங்கி பேசியதாவது: நான் தவெகவில் இணைய செல்லும்போது, பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த்தை சந்தித்தேன். அப்போது, அவர் என்னிடம் நாம் இருவரும் இரு கண்களாக இருந்து பணியாற்றுவோம் என கூறினார். ஒரு கண் வைத்துள்ளவர்களே பேசிக்கொண்டிருக்கிறார்கள். நாங்கள் இரு கண்ணோடு தேர்தல் களத்தில் நின்று கொண்டிருக்கிறோம். தவெக தலைவரை சந்திக்கும்போது, அவரை பார்த்து வியந்து போனேன். என்னை அரவணைத்தார். அவர் என்னை சகோதரராக ஏற்றுக்கொண்டார். அதற்கு தலைவருக்கு கோடான கோடி நன்றி .
எனது உடலில் ஓடுகிற ஒவ்வொரு சொட்டு ரத்தமும், தலைவரை கோட்டையில் அமர வைக்க சிந்தாமல் சிதறாமல் அதற்கான பணியை மேற்கொள்வேன். முதலில் எம்ஜிஆர், இரண்டாவது ஜெயலலிதா, மூன்றாவதாக விஜய் பின்னால் நின்று கொண்டிருக்கிறேன். கண் தெரியாதவன் வெளிச்சத்தை காண முடியாது. ஆனால், நான் இந்த இயக்கத்தில் இணைந்த பிறகு தான் வெளிச்சம் கிடைத்துள்ளது. இவ்வாறு செங்கோட்டையன் பேசினார்.நேற்று மாலை பிரசார கூட்டம் நடைபெற உள்ள இடத்தை பார்வையிட்ட செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறுகையில், காவல்துறையின் விதிமுறைக்கு ஏற்ப கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியவர்கள் கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்க்க வேண்டும். கூட்டம் நடைபெறும் இடத்தில் குடிநீர், கழிவறை வசதி செய்யப்பட்டுள்ளது.
15 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம், 40 பாதுகாப்பு கேமரா, டிஜிட்டல் பேனர் வைக்கப்பட உள்ளது. புதுச்சேரிக்கு பிறகு பெரியார் மண்ணில் நடைபெறும் கூட்டம் எல்லோர் பாராட்டையும் பெறும் வகையில் அமையும். கூட்டம் நடைபெறும் இடத்தில் உள்ள விளம்பர போர்டில் தொண்டர்கள் ஏறாமல் இருக்க முள் கம்பிவேலி சுற்றப்படும். மேலும் அங்கு தொண்டர் படை 5 பேர் இருப்பார்கள். 1000 தொண்டர் படைகள் தயாராக உள்ளது. ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி. டோக்கனோ பாஸ் போன்றவை இல்லை. ஒரு கேபினில் 500 முதல் 700 பேர் வரை அனுமதிக்கப்படும் என்றார்.
* ரோடு ஷோ நடத்தக்கூடாது: புஸ்ஸி எச்சரிக்கை
தவெக பொதுசெயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசுகையில், நாளை மறுதினம் 11 மணி முதல் 1 மணிக்குள் கட்சி தலைவர் பேச உள்ளார். பைக்குகளில் வேகமாக வருவது, ஊர்வலமாக வருவது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட கூடாது. அது ஈரோடு மண்ணிற்கு ஒத்து வராது. குழந்தைகள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் யாரும் வர வேண்டாம். ரோடு ஷோ நடத்த கூடாது என்றார்.
* இடத்தை அப்படியே ஒப்படைக்கணும் இந்து அறநிலையத்துறை உத்தரவு
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்தில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்திற்கு 5 நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்கு வரக்கூடியவர்களுக்கு குடிநீர் மற்றும் உணவு, பாதுகாப்பு ஆகியவற்றை சொந்த செலவில் ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும். ஒலி பெருக்கி, மேடை அமைக்க போலீஸ் அனுமதி பெற வேண்டும். கூட்டம் நிறைவடைந்த பிறகு இடத்தை சுத்தம் செய்து கொடுக்க வேண்டும். இடத்திற்கு உரிமை கொண்டாடக் கூடாது, இடம் எப்படி கொடுக்கப்பட்டதோ, அதே நிலையில் இடத்தை இந்து சமய அறநிலையத்துறையினரிடம் மீண்டும் வழங்க வேண்டும் என நிபந்தனைகள் விதித்துள்ளது.
