செய்யாறு, டிச.16: செய்யாறு அடுத்த சின்ன செங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சேகர். இவரது மனைவி மணிமேகலை(60), இவர்களுக்கு 3 மகன்கள் உள்ளனர். மேலும், கடந்த சில வருடங்களாக மணிமேகலை சர்க்கரை நோய்க்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், கடந்த ஓராண்டுக்கு முன் காலில் முள் குத்தியதால் ஏற்பட்ட காயம் ஆறாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக சிகிச்சை பெற்றும் குணமாகவில்லையாம். இதனால் மனவேதனையில் இருந்த மணிமேகலை கடந்த சில நாட்களாக வலி தாங்க முடியாமலும், சரியாக சாப்பிடாமலும், இருந்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று முன்தினம் மதியம் காலில் ஏற்பட்ட காயத்தினால், வலி அதிகமாகி துடித்துள்ளார். வலி தாங்க முடியாத அவர், விஷம் குடித்து மயங்கி கிடந்தார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது மகன் சரவணன் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக செய்யாறு அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்து சென்றார். அங்கு பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து சரவணன் கொடுத்த புகாரின்பேரில் அனக்காவூர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.
