×

கம்போடியா உடனான போர் பதற்றத்துக்கு மத்தியில் தாய்லாந்து நாடாளுமன்றம் கலைப்பு: அடுத்த ஆண்டில் தேர்தல்

சுரின்: கம்போடியா உடனான போர் பதற்றத்துக்கு மத்தியில் தாய்லாந்து நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. கம்போடியா-தாய்லாந்து இடையே 1907ம் ஆண்டில் சர்வதேச எல்லை வகுக்கப்பட்டது. இரு நாடுகளும் நீண்டகாலமாக கலாச்சார மற்றும் அரசியல் உறவுகளை கொண்டிருந்தாலும், நில எல்லை சர்ச்சை, தீவிர தேசியவாதம் மற்றும் அவ்வப்போது ஏற்படும் மோதல்கள் காரணமாக பதற்றங்கள் நிலவி வருகின்றன. இந்நிலையில், எல்லையில் அமைந்துள்ள 11ம் நூற்றாண்டை சேர்ந்த இந்து கோயில் தங்களுக்கு சொந்தமானது என கூறி இருநாடுகளும் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டு வருகின்றன.

இது, கடந்த ஜூலையில் முற்றியது. இரு நாட்டு வீரர்களும் மோதி கொண்டனர். சுமார் 5 நாட்கள் நடந்த இந்த போரில் 48 பேர் கொல்லப்பட்டனர். 3 லட்சம் பேர் அகதிளாகினர். அமெரிக்க அதிபர் டிரம்ப் பேச்சுவார்த்தை நடத்தி தீர்த்து வைத்தார். அக்டோபரில் மலேசியா சென்றபோது டிரம்ப் முன்னிலையில் இருநாட்டு தலைவர்களிடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில் கம்போடியா புதைத்து வைத்திருந்த கண்ணிவெடியில் சிக்கி, தங்கள் நாட்டு வீரர் காயமடைந்ததாக கூறி அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக தாய்லாந்து நவம்பரில் அறிவித்தது. இதனை தொடர்ந்து கடந்த 8ம்தேதி மீண்டும் மோதல் வெடித்தது.

இதில் இருதரப்பை சேர்ந்த 8 வீரர்கள் பலியாகினர். புதிய எல்லை மோதல்கள் இரு நாடுகளிடையேயான பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது. இதனிடையே கம்போடியா உடனான போர் பதற்றத்துக்கு மத்தியில் தாய்லாந்து நாடாளுமன்றத்தை கலைக்க மன்னர் ஒப்புதல் அளித்தார். இந்நிலையில், தாய்லாந்து நாடாளுமன்றத்தை அந்நாட்டு அரசு கலைத்துள்ளது. இதையடுத்து, சுமார் 45 முதல் 60 நாட்களுக்குள் பொதுத் தேர்தல் நடத்தும் தேதி அறிவிக்கப்பட உள்ளது. அதுவரை பிரதமர் அனுதின் சார்ன்விராகுல் தலைமையில் இடைக்கால அரசு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Thailand Parliament ,Cambodia ,Surin ,Thailand ,
× RELATED கொல்கத்தாவில் மெஸ்ஸியை பார்க்க...