×

2026 பிப்ரவரி முதல் வாரத்தில் சென்னையில் அனைத்துலக வள்ளலார் மாநாட்டினை முதல்வர் தொடங்கி வைக்கிறார்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

சென்னை: 2026 பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சென்னையில் அனைத்துலக வள்ளலார் மாநாட்டினை முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார். இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று சென்னையில் அனைத்துலக வள்ளலார் சுத்த மாநாட்டினை நடத்திட இடத்தினை தேர்வு செய்வது குறித்து கள ஆய்வு மேற்கொண்டார். நிறைவாக, காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான சென்னை, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காலி இடம் தேர்வு செய்யப்பட்டது. பின்னர், செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்; முதலமைச்சர், அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் பெருமைக்கு புகழ் சேர்க்கும் வகையில் அவரது பிறந்த நாளை தனிப்பெருங்கருணை நாளாக கொண்டாடுதல், முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதானம்,

ரூ. 100 கோடியில் வள்ளலார் சர்வதேச மையம், வள்ளலார் வாழ்ந்த மருதூர் இல்லம் புனரமைப்பு என பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக, அனைத்துலக மாநாட்டினை சென்னையில் நடத்திட உத்தரவிட்டதை தொடர்ந்து, மாநாட்டை நடத்துவதற்கான இடத்தினை தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டோம். அதன்படி, முதலமைச்சர், இம்மாநாட்டினை 2026 பிப்ரவரி மாதம் முதல் வாரத்தில் சென்னை, கீழ்ப்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில் அமைந்துள்ள காஞ்சிபுரம், ஏகாம்பரநாதர் திருக்கோயிலுக்கு சொந்தமான மைதானத்தில் தொடங்கி வைக்க உள்ளார்.

இம்மாநாட்டில் வள்ளலாரின் நெறிகளை பரப்பிடும் வகையிலான கண்காட்சி அரங்குகள், மூலிகைக் கண்காட்சி மற்றும் சித்த மருத்துவ முகாம், கருத்தரங்கம், ஆய்வரங்கம், சொற்பொழிவுகள் மற்றும் கலைநிகழ்ச்சிகள், நாள் முழுவதும் அன்னதானம், சன்மார்க்க அன்பர்களின் பேரணி போன்ற நிகழ்வுகளோடு நடத்தப்பட உள்ளது. அனைத்துலக வள்ளலார் மாநாட்டு பணிகளை ஒருங்கிணைந்து மேற்கொள்ள துறை அலுவலர்கள் மற்றும் சன்மார்க்க சங்க நிர்வாகிகளை கொண்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இம்மாநாடு எல்லா வகையிலும் வள்ளலாரின் புகழுக்கு மென்மேலும் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைந்திடும் என்று தெரிவித்தார்.

இந்நிகழ்வின் போது அண்ணா நகர் சட்டமன்ற உறுப்பினர் எம்.கே.மோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பி.என்.ஸ்ரீதர், ஆலோசனைக் குழு உறுப்பினர் சுகிசிவம், தலைமைப் பொறியாளர் பொ. பெரியசாமி, கூடுதல் ஆணையர்கள் சி.ஹரிப்ரியா, மா.கவிதா, பொ.ஜெயராமன், இணை ஆணையர்கள் சு.மோகனசுந்தரம், கி. ரேணுகாதேவி, ஜ.முல்லை, கண்காணிப்பு பொறியாளர் எம்.பழனி, உதவி செயற்பொறியாளர் விஜயா மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags : INTERNATIONAL WALLALAR CONFERENCE ,CHENNAI ,MINISTER ,SEKARBABU ,Chief Minister ,International Vallalar Conference ,B. K. Sekarpapu ,Minister of ,Hindu ,Religious Affairs ,P. K. SEKARBABU ,INTERNATIONAL WALLALAR CLEANSING CONFERENCE ,
× RELATED சுகாதார செவிலியர்கள், வட்டார சுகாதார...