திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில், மலையாள நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கில் கைதான 6 பேர் குற்றவாளிகள் என நேற்று தீர்ப்பளித்துள்ள எர்ணாகுளம் நீதிமன்றம், அவர்களுக்கான தண்டனை விவரத்தை வரும் 12ம் தேதி அறிவிக்கிறது. சுமார் 8 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மலையாள, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி படப்பிடிப்புக்காக திருச்சூரில் இருந்து கொச்சிக்கு காரில் செல்லும் வழியில் ஒரு கும்பலால் கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக முன்னணி நடிகர் திலீப் உள்பட 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட திலீப் மீது பலாத்காரத்திற்கு சதித்திட்டம் தீட்டியதாக குற்றம் சாட்டப்பட்டது. பாதிக்கப்பட்ட நடிகையிடம் கார் டிரைவராக பணிபுரிந்து வந்த பல்சர் சுனில்குமார் என்பவர் தான் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார்.
முதலில் ஆலுவா குற்றவியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணை பின்னர் எர்ணாகுளம் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.கொரோனா உள்பட பல்வேறு காரணங்களுக்காக 5 முறை இந்த வழக்கு விசாரணை நீட்டிக்கப்பட்டது. இந்த வழக்கில் மலையாள சினிமாவை சேர்ந்த பல பிரபல முன்னணி நட்சத்திரங்கள் நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.
இவர்களில் பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாக சாட்சியம் அளித்த நடிகைகள் பாமா, பிந்து பணிக்கர் உள்பட பலர் பின்னர் பிறழ் சாட்சிகளாக மாறினர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறுதிக்கட்ட விசாரணை முடிவடைந்தது. தொடர்ந்து டிசம்பர் 8ம் தேதி (நேற்று) தீர்ப்பு வழங்கப்படும் என்று எர்ணாகுளம் நீதிமன்றம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது. அதன்படி நேற்று இந்த வழக்கில் கைது செய்யப்பட்டிருந்த நடிகர் திலீப் உள்பட 10 பேரும் நீதிமன்றத்தில் ஆஜரானார்கள். இந்த தீர்ப்பு கேரளாவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியதால் காலையிலேயே நீதிமன்றத்தின் முன்பு ஏராளமானோர் குவிந்தனர்.
தொடர்ந்து நேற்று காலை 11 மணிக்கு மேல் நீதிபதி ஹனி எம். வர்கீஸ் தீர்ப்பை வாசித்தார். அப்போது இந்த வழக்கில் நடிகர் திலீப் சதி திட்டம் தீட்டியதாக எதுவும் நிருபிக்கப்பட வில்லை என்று கூறி வழக்கில் இருந்து அவரை விடுவித்து உத்தரவிட்டார். அதே சமயம் இந்த வழக்கில் பல்சர் சுனில், மார்ட்டின் ஆண்டனி, மணிகண்டன், விஜீஷ், சலீம் மற்றும் பிரதீப் ஆகிய 6 பேரும் குற்றவாளிகள் என்றும் அறிவித்த நீதிபதி, இவர்களுக்கான தண்டனை விவரம் வரும் 12ம் தேதி அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்தார். இவர்கள் 6 பேரும் தான் குற்றத்தில் நேரடியாக தொடர்புடையவர்கள். குற்றவாளிகள் தலைமறைவாவதற்கு உதவியவர்கள் மற்றும் சதித்திட்டம் ஆகிய குற்றங்கள் சுமத்தப்பட்ட சார்லி தாமஸ், திலீப், சனில்குமார் மற்றும் திலீப்பின் நெருங்கிய நண்பரான சரத் ஜி. நாயர் ஆகிய 4 பேர் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்ட 6 பேரின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு உடனடியாக நேற்று திருச்சூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். 12ம் தேதி தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் இவர்கள் வேறு வேறு சிறைக்கு மாற்றப்படுவார்கள் என்று கூறப்படுகிறது. நடிகர்கள், தயாரிப்பாளர் சங்கத்தில் மீண்டும் சேர்க்க முடிவு: நடிகை பலாத்கார வழக்கில் கைது செய்யப்பட்டவுடன் நடிகர் திலீப், மலையாள நடிகர்கள், தயாரிப்பாளர்கள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் சங்கங்களில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார். தற்போது இந்த வழக்கிலிருந்து திலீப் விடுவிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த சங்கங்களில் அவரை மீண்டும் சேர்க்க ஆலோசனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
* 3215 நாட்களுக்குப் பிறகு தீர்ப்பு
கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி இரவில் தான் கேரளாவை பரபரப்பில் ஆழ்த்திய பிரபல நடிகை கூட்டு பலாத்கார சம்பவம் நடந்தது. எர்ணாகுளம் அங்கமாலி அருகே காரில் சென்று கொண்டிருந்த போது பின்னால் வந்த ஒரு வேன், நடிகையின் கார் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியது. நடிகை காரை நிறுத்தியதும் அந்த வேனில் இருந்து இறங்கிய 6 பேர் கொண்ட ஒரு கும்பல் அவரை குண்டுக்கட்டாக தூக்கி வேனில் ஏற்றியது.
இதன்பின் வேனில் வைத்து அந்தக் கும்பல் அவரை கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்தது. அந்தக் கும்பலைச் சேர்ந்த ஒருவர் அந்தக் காட்சிகளை செல்போனில் வீடியோ எடுத்தார். பலாத்காரம் செய்த பின்னர் அந்த நடிகையை அந்தக் கும்பல் வழியில் இறக்கி விட்டது. அதன் பிறகு இவர் நேராக இயக்குனரும், நடிகருமான லாலின் வீட்டுக்கு சென்று கதறி அழுதபடியே விவரத்தை கூறினார். அதிர்ச்சியடைந்த லால், உடனடியாக அப்போதைய எர்ணாகுளம் காங்கிரஸ் எம்எல்ஏ பி.டி. தாமசுக்கு போன் செய்து வரவழைத்தார். இவர்தான் உடனடியாக போலீசுக்கு தகவல் தெரிவித்தார்.
மறுநாள் மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் கொச்சி களமசேரி மாஜிஸ்திரேட் முன்னிலையில் நடிகை ரகசிய வாக்குமூலம் அளித்தார். தொடர்ந்து இந்த வழக்கை விசாரிப்பதற்காக குற்றப்பிரிவு ஐஜி தினேந்திர கஷ்யப் தலைமையில் ஒரு தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை தான் இந்த வழக்கில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பல்சர் சுனில்குமார் உள்பட அனைவரையும் கைது செய்தது. முதலில் ஆலுவா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த விசாரணை பின்னர் எர்ணாகுளம் மாவட்ட முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. சம்பவம் நடந்து 3215 நாட்களுக்குப் பிறகு நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
* தீர்ப்பு குறித்து எதுவும் கூற விரும்பவில்லை பாதிக்கப்பட்ட நடிகை பேட்டி
பலாத்கார சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நடிகை மலையாள சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருந்த போது தான் இந்த கொடூர சம்பவம் நடந்தது. இவர் தமிழ், கன்னடம் உள்பட மொழிகளிலும் அப்போது பரபரப்பாக நடித்து வந்தார். வழக்கு விசாரணைக்காக இவர் பலமுறை நீதிமன்றத்தில் ஆஜரானார். நேற்றைய தீர்ப்பு குறித்து பாதிக்கப்பட்ட நடிகையிடம் கேட்ட போது, தற்போது இது தொடர்பாக எதுவும் கூற விரும்பவில்லை என்று தெரிவித்தார்.
* மஞ்சு வாரியர் தான் காரணம்
வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்ட நடிகர் திலீப் நீதிமன்ற வாயிலில் நிருபர்களிடம் கூறியது: இந்த வழக்கில் நான் எந்த சதியிலும் ஈடுபடவில்லை. இந்த வழக்கில் கிரிமினல் சதித்திட்டம் இருக்கிறது என்றும், அது தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்றும் மஞ்சு கூறியதற்கு பின்னர்தான் எனக்கு எதிரான சதித்திட்டம் தொடங்கியது. அப்போதைய ஒரு உயர் பெண் போலீஸ் அதிகாரியும், சில கிரிமினல் போலீஸ்காரர்களும் சேர்ந்து இந்த வழக்கில் என்னை சிக்க வைப்பதற்காக சதித்திட்டம் தீட்டினர்.
அதற்காக இந்த வழக்கில் முக்கிய குற்றவாளி மற்றும் சிலரை போலீசார் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தினர். சில பத்திரிகையாளர்களை வைத்து எனக்கு எதிராக பொய்யான தகவல்களை பரப்பினர். அந்தக் கட்டுக்கதைகள் நீதிமன்றத்தில் செல்லுபடியாக வில்லை. என்னுடைய வாழ்க்கையையும், சினிமா எதிர்காலத்தையும் அவர்கள் அழிக்க முயற்சித்தனர். பலாத்கார வழக்கில் நான் சதித்திட்டம் தீட்டியதற்கான எந்த ஆதாரங்களும் நிரூபிக்கப்படவில்லை. கடந்த 8 வருடங்களுக்கு மேலாக எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
* உயர்நீதிமன்றத்தில் அரசு சார்பில் அப்பீல்
கேரள சட்டத்துறை அமைச்சர் ராஜீவ் கூறியது: நடிகை பலாத்கார வழக்கில் உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய அரசு தீர்மானித்துள்ளது. இது தொடர்பாக முதல்வர் பினராயி விஜயனிடம் ஆலோசனை நடத்தப்பட்டு உள்ளது. தீர்ப்பு குறித்து ஆய்வு செய்த பிறகு மேல்முறையீடு செய்வதற்கு அவர் அனுமதி வழங்கி உள்ளார். அரசு எப்போதும் பாதிக்கப்பட்ட நடிகையுடன் தான் இருக்கிறது. அவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்பதே அரசின் நிலைப்பாடாகும். இவ்வாறு அவர் கூறினார்.
* பலாத்கார வழக்கில் நடிகைக்கு துணையாக நின்றவர்கள்: ஒரு பிளாஷ்பேக்
சென்னை: பலாத்கார கும்பலால் காரில் இருந்து நடிகை இறக்கிவிடப்பட்ட இடத்தின் அருகில்தான் சண்டக்கோழி, தீபாவளி, கர்ணன், பைசன் போன்ற படங்களில் நடித்த நடிகர் லால் வீடு உள்ளது. அன்றைய சூழலில் நடிகையின் நிலையை அறிந்து முழுக்கதையையும் கேட்ட நடிகர் லால், தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப்பை அழைத்து விஷயத்தைச் சொல்கிறார். உடனடியாக லால் வீட்டிற்கு வந்த தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் தன்னுடன் திருக்காக்கரா சட்டமன்ற உறுப்பினர் பி.டி.தாமஸையும் அழைத்து வந்தார். தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப்பும் அந்த எம்எல்ஏவும் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள். அப்போது நடிகையிடம் வழக்கு தொடுக்கும்படி பி.டி.தாமஸ் சொல்கிறார்.
அதோடு, போலீஸிடம் நேரடியாக பேசி இந்த வழக்கை பதிவு செய்ய வைத்த எம்எல்ஏ, மறுநாள் ஒரு பொதுக்கூட்டத்தில் இந்த விஷயத்தைப் பேசி அரசியல் ரீதியாகவும் விஷயத்தை பெரிதாக்கினார். எம்எல்ஏ தாமஸ் அந்த பொதுக்கூட்டத்தில் இந்த விஷயத்தைச் சொன்ன பிறகு அது பொதுவெளியில் தெரியவந்தது. இப்போது தாமஸ் உயிருடன் இல்லை. ஆனால் அவர் கடைசிவரை இந்த வழக்கில் நடிகைக்கு உறுதுணையாக நின்றார். முன்னதாக, சம்பவ நாளில் இந்த வழக்கின் இரண்டாவது குற்றவாளியும் நடிகையை அழைத்து வந்த கார் டிரைவர் மார்ட்டினை மடக்கிப் பிடித்ததும் இதே தாமஸ் தான். இதனால் லால், தாமஸ், ஆன்டோ ஜோசப் ஆகியோர் இந்த வழக்கில் முக்கிய பங்கு வகித்துள்ளனர்.
* திலீப் விடுதலை எதிரொலி: நடிகைகள் பார்வதி, ரம்யா, ரிமா ஆவேசம்
சென்னை: நடிகை பலாத்கார வழக்கில் மலையாள நடிகர் திலீப் விடுதலை செய்யப்பட்டதற்கு நடிகைகள் பார்வதி திருவோத்து, ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பார்வதி திருவோத்து, ரேவதி, ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல் உள்ளிட்ட நடிகைகள் இணைந்து திரையுலக பெண்கள் பாதுகாப்பு அமைப்பு தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பின் சார்பில் இவர்கள் கருத்து கூறும்போது, ‘‘நடிகை பலாத்கார வழக்கில் திலீப் விடுதலை செய்யப்பட்டது ஏற்புடையதல்ல. இந்த முடிவு பலவித கேள்விகளை எழுப்புகிறது. இது நம்பிக்கையை தளரச் செய்கிறது.
ஆனாலும் இதுவே முடிவும் அல்ல. இந்த வழக்கில் நாங்கள் மேல்முறையீடு செய்து நீதி பெறுவோம்’’ என ஆவேசமாக தெரிவித்துள்ளனர். பார்வதி திருவோத்து இன்ஸ்டாவில் வெளியிட்ட பதிவில், நீதி எங்கே? என கேள்வி எழுப்பியுள்ளார். ரீமா கல்லிங்கல், ‘‘முன்பை விட இப்போதுதான் பாதிக்கப்பட்ட நடிகை துணிச்சலுடன் இருக்க வேண்டும். மறைக்கப்பட்ட நீதிக்காக போராட வேண்டியுள்ளது’’ என்றார். ரம்யா நம்பீசன் வெளியிட்ட பதிவில், ‘‘ஆரம்பத்தில் உண்மை தோற்றதுபோல் தெரியலாம். ஆனால் இறுதியில் உண்மையே ஜெயிக்கும்’’ என்றார்.
