×

யானைகளை இடமாற்றம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க குழு : தமிழ்நாடு அரசு

சென்னை : தமிழ்நாடு அரசு யானைகளை இடமாற்றம் செய்யும்போது கடைப்பிடிக்க வேண்டிய விரிவான வழிகாட்டு முறையினை (SOP) உருவாக்க நிபுணர் குழு அமைத்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

“தமிழ்நாடு அரசு அறிவியல் ரீதியான வனவிலங்கு பாதுகாப்பு, வனவிலங்குகளை மனிதாபிமான அடிப்படையில் நிர்வகித்தல் மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு மிக உயர்ந்த முன்னுரிமை அளிக்கிறது.

மனித – வன விலங்குகள் மோதலைத் தடுக்கவும் மற்றும் மனித உயிர்களைப் பாதுகாக்க வேண்டிய சூழ்நிலைகளில் மட்டுமே காட்டு யானைகள் மற்றும் பிற வன உயிரினங்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றன.

கடந்த சில மாதங்களில், இரண்டு காட்டு யானைகள் இடமாற்றம் செய்யப்பட்டபோது உயிரிழந்ததன் மூலம் தற்போதுள்ள வழிகாட்டு நெறிமுறைகளில் மாற்றம் செய்யப்பட வேண்டிய நிலை எழுந்துள்ளது. இந்தச் சம்பவங்கள், காட்டு விலங்குகளை, குறிப்பாக யானைகளைப் பிடித்தல், கையாளுதல், இடமாற்றம் செய்தல், விடுவித்தல் மற்றும் விடுவித்த பிறகு கண்காணித்தல் பற்றிய நடைமுறைகள் பற்றிய விரிவான, அறிவியல் அடிப்படையிலான மதிப்பாய்வின் அவசியத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.

யானைகளை இடமாற்றம் செய்யும் நடைமுறைகளில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்வதற்காக, வன விலங்குகளைப் பிடிப்பது, இடமாற்றம் செய்வது மற்றும் விடுவிப்பது குறித்த தெளிவான நெறிமுறைகளை வகுக்க வேண்டியது அவசியம். குறிப்பாக யானைகளை இடமாற்றம் செய்வது பற்றிய தெளிவான நடைமுறைகளை வகுக்க பின்வரும் உறுப்பினர்களைக் கொண்ட மாநில அளவிலான நிபுணர் குழுவை அரசு அமைத்துள்ளது.

தேவைக்கேற்ப, நிறுவனங்கள், நடத்தை சூழலியல் வல்லுநர்கள் மற்றும் GIS நிபுணர்களை கூடுதல் கள நிபுணர்களாக குழு நியமித்துக்கொள்ளலாம்.

குழுவின் குறிப்பு மற்றும் விதிமுறைகள் (ToR).

இடமாற்றம் செய்யப்பட்ட யானைகளின் இறப்பு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளின் மதிப்பீடு மற்றும் மதிப்பாய்வு.

தேசிய மற்றும் உலகளாவிய அறிவியல் வழிகாட்டுதல்களுடன் தொடர்பான தற்போதைய நெறிமுறைகளை மதிப்பீடு செய்தல் மற்றும் வலுப்படுத்த வேண்டிய பகுதிகளை அடையாளம் காணுதல்.

வன விலங்குகளை, குறிப்பாக யானைகளைப் பிடிப்பது, இடமாற்றம் செய்வது மற்றும் விடுவிப்பதற்கான விரிவான, செயல்படுத்தக்கூடிய நிலையான வழிகாட்டு நடைமுறை (SoP) உருவாக்குதல்.

நிலையான வழிகாட்டு நடைமுறை இந்தியாவிற்கு ஒரு தேசிய மாதிரியாகக் கருதப்படுவதற்கு ஏற்ற தரநிலையாக இருப்பதை உறுதி செய்தல்.

இந்தக் குழு இரண்டு மாதங்களுக்குள் தனது அறிக்கையையும் வரைவு வழிகாட்டு முறையினையையும் அரசுக்கு சமர்ப்பிக்கும்.

வனவிலங்கு இடமாற்றத்திற்கான அறிவியல் பூர்வமான மற்றும் சுற்றுச்சூழல் ரீதியாக உணர்திறன் மிக்க கட்டமைப்பை உருவாக்குவதை தமிழ்நாடு அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. இது மாநில மற்றும் தேசிய வனவிலங்குகளின் பாதுகாப்புத் தன்மையை உறுதி செய்கிறது, என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,Tamil Nadu government ,Government of Tamil Nadu Scientific Wildlife Conservation ,
× RELATED தமிழ்நாட்டுக்கு டிசம்பர் மாதத்திற்கு...