×

ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: 3ம் நாளில் ஆந்திராவிடம் எளிதில் வீழ்ந்த தமிழ்நாடு

விசாகப்பட்டினம்: ரஞ்சி கோப்பை கிரிக்கெட்டில் நேற்று, தமிழ்நாடு அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 3ம் நாளில் ஆந்திரா 4 விக்கெட் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது. ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 2வது சுற்று டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகின்றன. எலைட் குரூப் ஏ பிரிவில் உள்ள தமிழ்நாடு – ஆந்திரா அணிகள் இடையிலான டெஸ்ட் போட்டி, விசாகப்பட்டினத்தில் கடந்த 8ம் தேதி துவங்கியது. முதல் இன்னிங்சில் தமிழ்நாடு 182 ரன்களும், ஆந்திரா 177 ரன்களும் எடுத்தன. பின்னர், 2வது இன்னிங்சை ஆடிய தமிழ்நாடு அணி, 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 102 ரன் எடுத்திருந்தது. தமிழ்நாட்டின் பிரதோஷ் ரஞ்சன் பால் 26, சாய் கிஷோர் ரன் எடுக்காமல் களத்தில் இருந்தனர். இந்நிலையில் 3ம் நாளான நேற்று, தமிழ்நாடு 2வது இன்னிங்சை தொடர்ந்தது.

ஆட்டம் துவங்கிய சிறிது நேரத்தில் பிரதோஷ் ரஞ்சன் பால் (29 ரன்), கேப்டன் சாய் கிஷோர் (16 ரன்), பாபா இந்திரஜித் (6 ரன்) என அடுத்தடுத்து சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். அதன் பின் வந்த சோனு யாதவ் 28 ரன்னிலும், ஆந்த்ரே சித்தார்த் 33, வித்யுத் 2, திரிலோக் நாக் 3 ரன்னில் ஆட்டமிழக்க, 195 ரன்னில் தமிழ்நாட்டின் 2வது இன்னிங்ஸ் முடிவுக்கு வந்தது. அதையடுத்து, 201 ரன் வெற்றி இலக்குடன் ஆந்திரா 2வது இன்னிங்சை துவக்கியது. துவக்க வீரர் அபிஷேக் ரெட்டி அட்டகாசமாக ஆடி 70 ரன் குவித்து ஆட்டமிழந்தார். பின் வந்தோரில் கரண் ஷிண்டே 51 எடுத்தார். இவர்களின் பெரும் பங்களிப்புடன் ஆந்திரா, 41.2 ஓவரில் 6 விக்கெட் மட்டுமே இழந்து 201 ரன் எடுத்து அபார வெற்றி பெற்றது. தமிழ்நாடு தரப்பில் சாய் கிஷோர் 3 விக்கெட் எடுத்தார்.

Tags : Ranji Trophy Cricket ,Tamil Nadu ,Andhra ,Visakhapatnam ,Andhra Pradesh ,Ranji Trophy Cricket Test ,
× RELATED கவுகாத்தி மாஸ்டர் பேட்மின்டன்...