வந்தவாசி, ஆக.14: வந்தவாசி நகராட்சி கூட்டத்தில் நேற்று பங்கேற்ற திமுக, பாமக கவுன்சிலர்கள் திடீர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வந்தவாசி நகராட்சி சாதாரண கூட்டம் நேற்று தலைவர் ஜலால் தலைமையில் நடந்தது. ஆணையாளர் சோனியா, மேலாளர் ரவி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கணக்காளர் பிச்சாண்டி வரவேற்றார். இக்கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவுன்சிலர்கள் பேசினர். மேலும், பல்வேறு வளர்ச்சி பணிகளுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், பாமக கவுன்சிலர் ராமஜெயம் புதிய பஸ் நிலையத்திற்கு அனைத்து பேருந்துகளும் செல்ல வேண்டும் எனவும், திமுக கவுன்சிலர் சந்தோஷ்குமார் தனது வார்டில் குப்பைகளை அகற்றுவதுடன் அவமரியாதையாக பேசிய சுகாதார ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி திடீர் தர்ணாவில் ஈடுபட்டனர். பின்னர், நகராட்சி தலைவர் ஜலால் சமரசத்தை ஏற்று போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. முன்னதாக மக்கள் நலனுக்காக உங்களுடன் ஸ்டாலின் முகாம் அறிவித்து செயல்படுத்தி உள்ள தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும், வந்தவாசியில் பாய் நெசவு பூங்கா ஏற்படுத்த மக்களவையில் பேசிய ஆரணி எம்பி எம்.எஸ்.தரணி வேந்தனுக்கும் நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முடிவில் ஆர்ஐ சிவக்குமார் நன்றி கூறினார்.
