அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடியை ஏற்க தேர்தல் ஆணையம் மறுப்பு: உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு

புதுடெல்லி: அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிக்கவில்லை என்றும், இரட்டை இலை சின்னத்தை வழங்குவது குறித்து தேர்தல் அதிகாரி தான் முடிவெடுப்பார் எனவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வருகிறது. அதிமுகவில் ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இருந்து வந்த நிலையில் இருவருக்கும் இடையே அதிகார மோதல் ஏற்பட்டதால் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டது.

இதையடுத்து கடந்த ஆண்டு ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட பொதுக்குழுவின் போது எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அந்த பொதுக்குழுவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் அதன் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் ஒத்திவைத்தது.

இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈ.வெ.ரா மறைவை அடுத்து, அந்த தொகுதிக்கு பிப்ரவரி 27ம் தேதி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து அனைத்து கட்சிகளும் தேர்தல் வேலைகளில் மும்மரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தமிழக தலைவர் இ.வி.கே.எஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத்தொடர்ந்து நீண்ட இழுபறிக்கு பின்னர் தற்போது எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கு முன்னாள் எம்எல்ஏ தென்னரசும், அதேப்போன்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் செந்தில் முருகன் என்பவரும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும் பாஜவின் ஆதரவு யாருக்கு என்ற அவர்களது நிலைப்பாட்டை தற்போது வரையில் தெரிவிக்காமல் இழுத்தடிப்பு செய்து வருகிறது. இந்த நிலையில் ஈரோடு

கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தங்களுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி இடையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.

இது குறித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் நேற்று பதில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில்,‘‘வாக்காளர் பட்டியலை தயார் செய்வது, தேர்தலை கண்கானிப்பது ஆகியவை தான் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தின் வேலையாகும். ஒரு உட்கட்சியின் செயல்பாடுகளை கண்கானிப்பதோ அல்லது அதில் முறைப்படுத்தல்களை மேற்கொள்வதோ கண்டிப்பாக கிடையாது. மேலும் அங்கீகரிக்கப்பட்ட ஒவ்வொரு கட்சிகளும் குறிப்பிட்ட இடைவெளியில் தேர்தலை நடத்தி அதனை இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும். ஆனால் இவர்களது தரப்பில் அப்படி எந்த தகவல்களும் ஆணையத்தில் தெரிவிக்கப்படவில்லை. மேலும் கையெழுத்திட அதிகாரமுள்ளவர் என தேர்தல் ஆணைய ஆவணங்களில் குறிப்பிட்டவர்களின் கையெழுத்துள்ள வேட்பு மனுவை மட்டும் தான் ஆணையத்தால் ஏற்க முடியும்.

குறிப்பாக கடந்த ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமியை இடைக்கால பொச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கவோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ இல்லை.  

மேலும், அதிமுக பொதுக்குழு வழக்குகள் நிலுவையில் இருந்தாலும் இரட்டை இலை சின்னம் தொடர்பாக யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. இருப்பினும் இரட்டை இலை சின்னத்தை நாங்கள் நேரடியாக ஒதுக்கீடு செய்தோ அல்லது அதற்கு சம்மதம் தெரிவித்தோ உத்தரவு பிறப்பிக்க முடியாது.  அதனால் ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு செய்வது தொடர்பாக அதுசார்ந்த தேர்தல் அதிகாரி தான் இறுதி முடிவை மேற்கொண்டு அதுகுறித்த அறிவிப்பை வெளியிடுவார். மேலும் அதிமுக பொதுக்குழு மற்றும் அதில் நிறைவேற்றிய தீர்மானம் அனைத்தும் கேள்விக்குறியதாகவும், விவாதத்திற்கு உள்ளதாக இருக்கிறது.

அதனால் அதில் எடுக்கப்பட்ட முடிவுகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் ஏற்கவில்லை. மேலும் அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் தற்போது தேர்தல் ஆணையத்தால் எந்த முடிவும் எடுக்க முடியாது. அதனால் தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமியை அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்க முடியாது என்பதால், அவரது புதிய இடைக்கால மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமியின் இடையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. அப்போது, இரட்டை இலை சின்னம் தொடர்பாக நீதிபதிகள் உத்தரவு பிறப்பிப்பார்கள் என்று தெரிகிறது.

* கடந்த ஜூலை 11ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை தேர்தல் ஆணையம் அங்கீ கரிக்கவில்லை.

* இரட்டை இலை சின்னம் தொடர்பாக இதுவரை யாரும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.

* ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் அதிகாரி தான் இரட்டை சின்னம் குறித்த இறுதி முடிவை அறிவிப்பார்.

* எடப்பாடி மனுவை தள்ளுபடி செய்ய ஒ.பி.எஸ் கோரிக்கை

உச்ச நீதிமன்றததில் ஓ.பி.எஸ். தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுக  பொதுக்குழு தொடர்பான வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், எடப்பாடி  பழனிசாமி தாக்கல் செய்துள்ள மனுவை உச்ச நீதிமன்ற ஏற்காமல் நிராகரித்து  அதனை தள்ளுபடி செய்ய வேண்டும். குறிப்பாக பொதுக்குழு தொடர்பான வழக்கில்  அனைத்து சரத்து மற்றும் விவரங்களும் அடங்கியுள்ள நிலையில், அதற்கு மாறாக  தாக்கல் செய்யப்பட்டுள்ள இடைக்கால மனு என்பது விசாரணைக்கு உகந்தது  கிடையாது.  சட்டவிரோதமான நடவடிக்கைகளில்  ஈடுபட்டு கட்சியை தன்வசப்படுத்த எடப்பாடி பழனிசாமி நினைக்கிறார். இதுபோன்று  செய்வது என்பது நீதிமன்ற சட்ட விதிகளுக்கு எதிரானதாகும். இந்த  விவகாரத்தில் நீதிமன்றத்தை தவறாக வழிநடத்தும் அனைத்து முயற்சிகளையும்  எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: