பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை ஆட்சியர்கள் தடுக்க வேண்டும்: வேலூரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

வேலூர்: பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை ஆட்சியர்கள் தடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைத்து வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். குடிநீர், சுகாதாரம், கல்வி, மருத்துவம், குழந்தைகள் ஊட்டச்சத்து, இளைஞர் திறன் மேம்பாடு பற்றி ஆய்வு செய்தார். மக்களின் கோரிக்கை மனுக்கள் குறித்தும், நிலுவையில் உள்ள புகார் மனுக்கள் குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். பின்னர் கள ஆய்வு கூட்டத்தில் உரையாற்றிய முதல்வர், அறிவிக்கப்பட்ட திட்டங்களில் பெரும்பாலான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன.

பல வழிமுறைகளில் திட்டங்கள் பிறந்தாலும் அதனை முழுமையாக மக்களிடம் கொண்டு செல்லும் பொறுப்பு அரசு அலுவலர்களுக்கு உள்ளது. அரசு துறைகள் ஒன்றோடு ஒன்று இணைந்து செயல்பட்டால் தான் திட்டப்பணிகள் விரைவாக முடிவுபெறும். ஒவ்வொரு திட்டமும் பல கோடி ரூபாய் செலவில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அரசு நிதி மட்டுமின்றி கடன் வாங்கியும் திட்டங்களுக்காக செலவிடுகிறோம். மக்கள் வரிப்பணம் வீணாகாமல் ஒதுக்கப்படும் நிதியை விட குறைந்த செலவில் திட்டங்களை முடிக்க வேண்டும். ஒவ்வொரு ஆண்டுக்கான பணிகளை அந்தந்த ஆண்டிலேயே முடிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் திட்டங்களை முடிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதல்வர், இன்றைய ஆய்வில் சில துறைகளில் 2021 -22ம் ஆண்டு பணிகள் முடிக்கப்படாமல் இருந்தது தெரியவந்துள்ளது. தொடர்ந்து ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளும் கள ஆய்வில் ஈடுபட வேண்டும். பட்டா மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு மக்கள் அலைக்கழிக்கப்படுவதை ஆட்சியர்கள் தடுக்க வேண்டும். பணிகளை ஆட்சியர்கள் கவனமாக கண்காணித்து செயல்படுத்தினால் அனைத்து திட்டங்களும் மக்களை சென்றடையும். பட்ஜெட்டில் புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட உள்ளது. பட்ஜெட்டுக்கு முன்பாகவே தற்போதுள்ள திட்டங்கள் அனைத்தையும் செயல்படுத்த வேண்டும் என்று கூறினார்.

Related Stories: