ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான பொதுப்பார்வையாளர்களாக இரண்டு பேரை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவு..!!

டெல்லி: ஈரோடு இடைத்தேர்தலுக்கான பொதுப்பார்வையாளர்களாக இரண்டு பேரை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பார்வையாளர்களாக ராஜஸ்தானை சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரி ராஜ்குமார், ஆந்திராவை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சுரேஷ்குமார் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தேர்வு நிறைவடையும் வரை இருவரும் ஈரோட்டில் இருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களின் மொபைல் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்கெடுப்பு நடைபெறும் வரை ஈரோட்டில் இருப்பார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடைபெறுவதையொட்டி, வேட்புமனுத் தாக்கல் இன்று முதல் தொடங்கியது. வரும் 7ம் தேதி வரை வேட்புமனுத் தாக்கல் செய்யப்படுகிறது. 8ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலனையும், 10ம் தேதி வேட்புமனுக்கள் வாபஸ் பெறும் நிகழ்வும் நடைபெறவிருக்கின்றன. இதையொட்டி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் செய்யப்பட்டு, தயார் நிலையில் இருக்கிறது. இதனிடையே, பல்வேறு அரசியில் கட்சியினர் ஈரோடு கிழக்கு தொகுதியில் குவிய தொடங்கி உள்ளனர்.

குறிப்பாக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் முகாமிட்டு உள்ளனர். கட்சி பிரமுகர்கள் நாள்தோறும் வீடு வீடாக சென்று வாக்காளர்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகிறார்கள். திமுக காங்கிரஸ் கூட்டணி சார்பில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், நாம் தமிழர் கட்சி சார்பாக மேனகா நவநீதன், தேமுதிக சார்பாக ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆனந்த், அமமுக சார்பாக சிவ பிரசாந்த் ஆகியோர் களமிறக்கப்பட்டுள்ளனர்.

தற்போது வரை அதிமுகவில் எடப்பாடி அணி சார்பிலும், ஓபிஎஸ் அணி சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஈரோடு இடைத்தேர்தலுக்கான பொதுப்பார்வையாளர்களாக இரண்டு பேரை நியமித்து இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: