பாளை சிக்கன் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு-வாகனம் மூலம் உடனுக்குடன் பரிசோதனை

நெல்லை :  பாளை சிக்கன் கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர். நடமாடும் பரிசோதனை வாகனம் மூலம் உடனுக்குடன் பரிசோதனையும் நடந்தது.குடியரசு தின விழாவை முன்னிட்டு பாளை வஉசி மைதானத்தில் நடமாடும் உணவு பரிசோதனை வாகனத்தை கலெக்டர் விஷ்ணு தொடங்கி வைத்தார். மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் உணவு பகுப்பாய்வுகளை  அந்த வாகனம் மூலம் மேற்கொள்ள அவர் உத்தரவிட்டார். இதையடுத்து பாளை வஉசி மைதானம் பின்புறமுள்ள தெருவில் உள்ள துரித உணவு கடைகளில் நேற்று வாகனம் மூலம் அதிரடி ஆய்வுகளை மேற்கொண்டனர்.

அச்சாலையில் உள்ள சிக்கன் கடைகள், முட்டையில் இருந்து தயாரிக்கப்படும் மயேனேஸ், சிக்கன் 65, ஷபர்மா உள்ளிட்ட உணவு பண்டங்களை மாதிரி எடுத்து உடனுக்குடன் வாகனத்தில் வைத்து ஆய்வு செய்தனர். உணவு பாதுகாப்புத்துறை நெல்லை மாவட்ட நியமன அலுவலர் சசிதீபா ஆலோசனையில் பேரில், பாளை உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் சங்கரலிங்கம், பகுப்பாய்வு கூட பகுப்பாய்வர்கள் கணேஷ்ராம், பிரகாஷ் ஆகியோர் உணவு மாதிரிகளை சோதித்து கலப்படங்களை கண்டறிந்தனர். அப்பகுதியில் உள்ள சிக்கன் கடைகள் மட்டுமின்றி, ப்ரைடு ரைஸ், குளிர்பானங்கள், போளி உள்ளிட்ட கடைகளிலும் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.

Related Stories: