நெல்லையில் வார்டு பணிகளில் தொய்வு மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் காரசார விவாதம்-பாளை. மார்க்கெட் பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தல்

நெல்லை :  வார்டுகளில் நடைபெற வேண்டிய பணிகளில் தொய்வு நிலவுவதாக நெல்லை மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் நேற்று காரசாரமாக குற்றம் சாட்டி பேசினர். பாளை. மார்க்கெட் பிரச்னைக்கு தீர்வு காணுமாறு கவுன்சிலர்கள் நேற்று கோரிக்கை விடுத்தனர்.நெல்லை மாநகராட்சி சாதாரண மற்றும் அவசரக் கூட்டம் நேற்று மேயர் பி.எம். சரவணன் தலைமையில் நடந்தது. துணை மேயர் கே.ஆர். ராஜூ, கமிஷனர் சிவ கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மண்டல தலைவர்கள் கதீஜா இக்லாம் பாசிலா, மகேஸ்வரி மற்றும் கவுன்சிலர்கள், மாநகர பொறியாளர் லட்சுமணன் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் மேயர் பி.எம். சரவணன் பேசுகையில்,  ‘‘நெல்லை மாநகராட்சியின் தற்போதைய மக்கள் தொகைப்படி 70.51 எம்எல்டி குடிநீர் தேவைப்படுகிறது.

அரியநாயகிபுரம் கூட்டுகுடிநீர் திட்டத்தின்படி  35 எம்எல்டி குடிநீர் பெறும் வகையில் பணிகள் முடிந்துள்ளன. நெல்லை மாநகராட்சி 37, 38, 39, 40, 41, 51, 53, 54 ஆகிய வார்டுகளுக்கு ரூ.35 கோடி செலவில் முறப்பநாடு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது குடிநீர் பிரச்னை தீரும். நெல்லை ரெட்டியார்பட்டி பைபாசில் இருந்து எஸ்டிசி கல்லூரி வரை திட்ட சாலை அமைத்திடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றார்.

ரவீந்திரன் (திமுக):  நெல்லை மாநகராட்சிக்கு சம்பந்தமில்லாத நபர்கள் அலுவலகத்தில் அடிக்கடி தலை காட்டுகின்றனர். இதனால் சட்டம், ஒழுங்கு பிரச்னை ஏற்பட வாய்ப்புள்ளது. (இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில கவுன்சிலர்கள் எழுந்ததால், காரசார விவாதம் நடந்தது)டாக்டர் சங்கர் (திமுக):  பாதாள சாக்கடை திட்டம், அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் உள்ளிட்டவைகளுக்காக தோண்டப்பட்ட குழிகள், தச்சநல்லூர் பகுதியில் அதிகம் காணப்படுகின்றன. சந்தி மறித்த அம்மன் கோயில் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு அடிக்கடி தண்ணீர் வீணாக செல்கிறது.

சுப்புலட்சுமி (திமுக):  பாளை மார்க்கெட்டில் 540 கடைகள் ஒதுக்கியுள்ளனர். கடை அமைக்கப்பட்டுள்ள பகுதியில்  40 பிளாட்டுகளை இப்போது 90 பிளாட்டுகளாக மாற்றி விட்டனர். கடைகளை ஒதுக்கீடு செய்வதில் பல்வேறு குளறுபடிகள் உள்ளன. மின் இணைப்பு வழங்குவதற்காக கூடுதலாக ரூ.13,500 கேட்கின்றனர். (இதே கோரிக்கையை வலியுறுத்தி மற்ற கவுன்சிலர்களும் குரல்கொடுத்தனர்)மாநகராட்சி கமிஷனர் சிவ. கிருஷ்ணமூர்த்தி:  பாளை மார்க்கெட் கடைகள் ஒதுக்கீடு குறித்து தனி அதிகாரி விசாரணை நடத்துகிறார். மின் இணைப்புக்கு கூடுதல் கட்டணம் குறித்து விசாரிக்கப்படும்.

ஜெகநாதன் (திமுக):  எனது 5வது வார்டுக்கு உட்பட்ட கக்கன் நகர் நியூ காலனி அருகே சங்கீதா நகரில் பூங்கா அமைத்துத் தர வேண்டும். திம்மராஜபுரம் உச்சிமாகாளியம்மன் கோயில் எதிரே உள்ள ரோடு மிகவும் மோசமாக காணப்படுகிறது. அதை சரி செய்து தர வேண்டும். கக்கன் நகரில் 7 கல்வெட்டு பாலம் மோசம் அடைந்து காணப்படுகிறது. இதனால் சாக்கடை நீர் தேங்கியுள்ளது. அதையும் சரி செய்து தர வேண்டும்.

சுகாதார நிலைக்குழுத் தலைவர் ரம்ஜான் அலி:  மேலநத்தம் பகுதிக்கு புதிய குடிநீர் தொட்டி அமைத்துத் தர வேண்டும். அங்கு சாலைகளை சீரமைத்துத் தர வேண்டும்.

சபீ அமீர் பாத்து (திமுக): எனது 47 வார்டுக்குட்பட்ட பாரதியார் தெரு, வரதராஜர் தெரு உள்ளிட்ட தெருக்களில் கழிவு நீர் செல்லும் ஓடைகள் மோசமாக காணப்படுகின்றன. மேலப்பாளையத்தில் நாய்கள் தொல்லை சமீப காலமாக அதிகம் உள்ளது. எனவே நாய்களை பிடித்து வெளியே கொண்டு போய்விட வேண்டும்.

அஜய் (திமுக):  எனது 15வது வார்டில் 12 அடி பம்புகளை சரி செய்யவில்லை. கோட்டையடியிலும், நதிப்புரத்திலும் கழிப்பிடங்கள் இடிந்து விழும் நிலையில் உள்ளது. வார்டுகளில் எந்த பணியுமே நடப்பதில்லை. எங்கள் மண்டல கூட்டங்களில் எந்த கோரிக்கை வைத்தாலும் அது நிறைவேறுவதில்லை. (இவரது பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து கவுன்சிலர்கள் எழுந்ததால் மீண்டும் காரசாரமாக கவுன்சிலர்கள் பேசினர்)பொன்மாணிக்கம்(திமுக): எனது 42வது வார்டில் சிஎஸ்ஐ சர்ச் ரோடு, பொன்விழா நகர் இணைப்பு சாலைகள் உள்ளிட்ட பணிகளை செய்து கொடுத்தமைக்கு அதிகாரிகளுக்கு நன்றி. அரியநாயகிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டத்தில் பெருமாள்புரம் நீர்தேக்க தொட்டிக்கு இணைப்பு வழங்கிட வேண்டும். இதற்கு சுமார் 600 மீட்டர் தூரம் மட்டுமே குழாய்கள் பதிக்க வேண்டும். துப்புரவு பணியாளர்களுக்கு 2 கழிப்பிடம், 2 குளியல் அறை கட்ட 42வது வார்டு அலுவலக வளாகத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது. அப்பணிகளையும் விரைந்து தொடங்க வேண்டும்.

உலகநாதன்(திமுக):  எனது 27வது வார்டில் உள்ள கரியமாணிக்க பெருமாள் கோயிலில் விரைவில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ள நிலையில், அங்குள்ள ரதவீதிகளில் புதிய சாலைகள் அமைத்து தர வேண்டும். கழிவுநீரோடைகளை சீரமைக்க வேண்டும். மேலும் அங்குள்ள மேலரதவீதியில் உயரத்துடன் கூடிய கழிவுநீரோடைகள் அமைத்து தர வேண்டும்.

சின்னதாய்(திமுக):   எனது 36வது வார்டு அண்ணாநகர், இந்திராநகரில் மேடான இடங்களுக்கு தண்ணீர் செல்வதில்லை. அண்ணாநகரில் சமுதாய நலக்கூடம் அமைத்து தர வேண்டும். 30 ஆண்டுகளாக பழுதாகி கிடக்கும் கோரிபள்ளம் சிமென்ட் ரோட்டை சீரமைப்பதோடு, காதிர்நகருக்கு சாலை அமைத்து தர கேட்டு கொள்கிறேன்.

அலிஷேக் மன்சூர்(திமுக):  டவுன் ஸ்ரீபுரம்- ஊருடையான்குடியிருப்பு சாலையை சீரமைக்க வேண்டும். 49வது வார்டு கொட்டிக்குளத்தில் கழிவுநீரோடையை சீரமைத்து தர வேண்டும்.

இவ்வாறு விவாதம் நடந்தது.

Related Stories: