சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகன் தீக்குளிக்க முயற்சி-போலீசார் விசாரணை

சேலம் : சேலத்தில் தனக்கு சொந்தமான வீட்டை அபகரிக்க நினைக்கும் அண்ணனின் இரண்டாவது மனைவி மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் கலெக்டர் அலுவலகத்தில் தாய், மகன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.சேலம் பொன்னம்மாப்பேட்டை டிஎம்எஸ் மணல் மார்க்கெட் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி மோகனாம்மாள் (65). இவர்களுக்கு கோவிந்தராஜ் (33), சீனிவாசன் (30) ஆகிய மகன்கள் உள்ளனர். நேற்று காலை மோகனாம்மாள் மற்றும் கோவிந்தராஜ் கலெக்டர் அலுவலகம் வந்தனர். அவர்கள் திடீரென அலுவலக நுழைவு வாயிலில் உடலில் டீசலை ஊற்றி தீக்குளிக்க முயன்றனர்.

அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் இருவரையும் தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவர்களை போலீசார் சேலம் டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அனுப்பி வைத்தனர்.இது குறித்து மோகனாம்மாள் கூறுகையில், எனது அண்ணன் தங்கராஜ் குள்ளம்பட்டி காளியம்மன் கோயில் தெருவில் உள்ள வீட்டை எனது பெயரில் எழுதி வைத்தார். இந்த நிலையில் அவர் கடந்த 2020ம் ஆண்டு ஜூலையில் இறந்துவிட்டார்.

அவரது இறப்புக்கு பிறகு வீட்டை காலி ெசய்யும்படி அவரது இரண்டாவது மனைவி குணாவிடம் ெதரிவித்தேன். ஆனால் அவர் வீட்டை காலி செய்யாமல் மிரட்டல் விடுத்து வருகிறார்.

இது சம்பந்தமாக அம்மாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. வீட்டை அபகரிக்க நினைக்கும் குணா மீது உரிய நடவடிக்கை எடுத்து வீட்டை மீட்டுத்தரவேண்டும், என்றார்.

Related Stories: