வேகத்தடை, பிரதிபலிப்பான் அமைக்காததால் சிறுவந்தாடு பகுதியில் தொடரும் விபத்து-நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

விழுப்புரம் :  விழுப்புரம் அருகே சிறுவந்தாட்டில் ரூ.2 கோடியில் சாலைவிரிவாக்கம் செய்தநிலையில் விபத்துக்களை தடுக்கும் வகையிலான பிரிதிபலிப்பான்கள், வேகத்தடை அமைக்காததால் உயிரிழப்புகளும், விபத்துக்களும் அதிகரித்து வருகின்றன.  தமிழகத்தில் அதிக தேசிய நெடுஞ்சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளைக்கொண்ட ஒருங்கிணைந்த மாவட்டமாக விழுப்புரம் இருந்து வந்தது. அதற்கேற்ப விபத்துக்கள் எண்ணிக்கையிலும் முதல் மூன்று இடங்களில் இருந்தன.

இந்நிலையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் தனியாக பிரித்தபோதும் விபத்துக்கள், உயிரிழப்புகள் கனிசமாக குறைந்தாலும் மேலும் விபத்துக்களை தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் முக்கிய இடங்களில் உயர்மட்ட மேம்பாலங்கள், விபத்துக்கள் ஏற்படும் பகுதியில் சாலைவிரிவாக்கம், சென்ட்ர்மீடியன் கட்டை அமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

 கடந்த காலங்களில் ஏற்படும் விபத்துக்களை கணக்கிட்டு அந்த இடங்களில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி விழுப்புரம் அருகே சிறுவந்தாடு நான்குமுனைச்சந்திப்பு குறுகலான இடத்தில் தொடர்விபத்துக்களை சந்தித்து வந்தது. விழுப்புரத்திலிருந்தும், வளவனூர் பகுதியிலிருந்து செல்லும் சாலை மடுகரை வழியாக புதுச்சேரிக்கு செல்கிறது.

 3 சாலைகள் சந்திப்பு பகுதியில் தொடர் விபத்துக்கள் ஏற்படுவதால் அந்த இடத்திலும், பேருந்துநிறுத்தம் உள்ளிட்ட பகுதிகளில் சாலைவிரிவாக்கம் செய்து செண்டர்மீடியன் கட்டைகள் அமைக்க ரூ.2 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்தது. தற்போது பணிகள் முடிவடைந்துள்ளன. புகழ்பெற்ற சிறுவந்தாடு பட்டுபுடவை எடுக்க நூற்றுக்கணக்கான பொதுமக்கள் வந்து செல்கின்றனர். அதுமட்டுமல்லாமல் சிறுவந்தாடு வழியாக பிரசித்தி பெற்ற பூவரசன்குப்பம் லட்சுமிநரசிம்மர் உள்ளிட்ட கோயில்களுக்கும் இவ்வழியாகவே வாகனங்கள் சென்று வருகின்றன.

 இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் சாலைவிரிவாக்கப்பணிகளும், சென்ட்டர்மீடியன் கட்டைகள் அமைத்ததோடு நிறுத்தி விட்டனர்.

விபத்துக்களை தடுக்கும் வகையிலான பிரதிபலிப்பான், வேகத்தடை போன்ற எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதனால் மூன்று பக்கமும் அதிவேகமாக வரும் வாகனங்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றன. நேற்றுமுன்தினம் சிறுவந்தாடு பகுதியிலிருந்து ஒருடிராக்டர் சென்றபோது, மடுகரை மார்க்கத்திலிருந்து வந்த இருசக்கரவாகனம் மீது மோதி சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்தார்.

 இதுபோன்ற விபத்துக்களும், உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. விபத்துக்களை தடுக்கும் வகையில் சாலைவிரிவாக்கம், சென்ட்டர்மீடியன் கட்டை அமைக்கப்பட்டாலும் வாகனங்களின் வேகத்தை குறைக்கவும், பிரிதிபலிப்பான்கள் போன்றவைகள் பொறுத்தாததால் அதேநிலை தொடர்ந்து வருகிறது. எனவே நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூகஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

குடிமகன்கள் தாறுமாறு...

இதனிடையே சிறுவந்தாடு- மடுகரை இடையே குடிமகன்கள் தாறுமாறாக வாகனத்தை ஓட்டிச்செல்வதால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சிறுவந்தாட்டிலிருந்து, புதுச்சேரி எல்லையான மடுகரைக்கு 2 கி.மீ தூரம் உள்ளது. தினமும் மது அருந்துவதற்காக தமிழகப்பகுதியிலிருந்து ஏராளமானோர் வந்துசெல்கின்றனர். மதுபோதையில் இந்த சாலையில் அதிவேகமாக வானத்தை ஓட்டி வருவதால் பொதுமக்களும், மற்ற வாகனக ஓட்டிகளும் அச்சத்துடன் பயணிக்கும் நிலை உள்ளது. எனவே சிறுவந்தாடு பகுதியில் போலீசார் அவ்வபோது சோதனை செய்து அதிவேகமாக வாகனத்தை ஓட்டுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: