மனித - விலங்கு மோதலை தடுக்க கூடலூர், ஓவேலியில் 5 இடங்களில் முகாம்கள் அமைத்து கண்காணிக்க திட்டம்-கலெக்டர் தகவல்

ஊட்டி :  கூடலூர், ஓவேலி பகுதியில் மனித விலங்கு மோதலை தடுக்க 5 இடங்களில் வனத்துறை சார்பில் முகாம்கள் அமைத்து கண்காணிக்கப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டத்தில் வன விலங்குகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. குறிப்பாக, கூடலூர் பகுதிகளில் காட்டு யானைகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ள நிலையில், அடிக்கடி மனித விலங்கு மோதல் ஏற்பட்டு வருகிறது. இங்கு காட்டு யானைகள் தாக்கி விவசாயிகள் மற்றும் தோட்ட தொழிலாளர்கள் உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது. குறிப்பாக, ஓவேலி பகுதியில் யானைகள் தாக்கி தோட்ட தொழிலாளர்கள் உயிரிழப்பது வாடிக்கையாக உள்ளது.

கடந்த இரு நாட்களுக்கு முன் கூட கூடலூர் ஓவேலி பகுதியில் காட்டு யானை தாக்கி நவ்சாத் என்பவர் உயிரிழந்தார். யானைகள் தாக்கி மனிதர்கள் அடிக்கடி உயிரிழந்து வரும் நிலையில், இதனை தடுக்க வேண்டும் கூடலூர் பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஆனால், இதுவரை வனத்துறை சார்பில் மனித விலங்கு மோதலை தடுக்க உரிய நடவடிக்கைகள் எடுத்ததாக தெரியவில்லை.

இதனால், இப்பகுதி மக்கள் தற்போது மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையின் மீது கடும் கோபத்தில் உள்ளனர். இந்நிலையில், ஓவேலி பகுதியில் ஏற்படும் மனித விலங்கு மோதலை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, இப்பகுதியில் 5 இடங்களில் வனத்துறை சார்பில் முகாம்கள் அமைக்கப்பட்டு யானைகளின் நடமாட்டத்தை கண்டறிந்து, மக்களுக்கு அறிவிப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கவும், தோட்ட தொழிலாளர்கள் மற்றும் தோட்ட அதிபர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி பணி நேரங்களை மாற்றி அமைப்பது, அடிப்படை வசதிகள் செய்து தருவது போன்றவைகள் மேற்கொள்ளப்படும் என கலெக்டர் தெரிவித்தார்.

இது குறித்து நீலகிரி மாவட்ட கலெக்டர் அம்ரித் ஊட்டியில் நிருபர்களிடம் கூறியதாவது:கூடலூர், ஓவேலி பகுதியில் காட்டு யானைகள் தாக்கி விவசாயிகள் மற்றும் ேதயிலை தோட்ட தொழிலாளர்கள் உயிரிழந்து வருகின்றனர். இதனை தடுக்க வருவாய்த்துறை, காவல்துறை மற்றும் வனத்துறை இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

எனினும், விபத்துக்கள் தொடர்வதால் இதற்கு நிரந்தர தீர்வு காண தற்போது பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் விபத்து ஏற்பட முக்கிய காரணம், இது கேரள மாநிலத்தில் இருந்து தமிழகத்திற்கு, அதாவது கேரள மாநிலத்தில் இருந்து முதுமலை வழியாக சத்தியமங்கலத்திற்கு யானைகள் செல்லும் முக்கிய வழித்தடமாக உள்ளது. இதனால், இப்பகுதியில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

எனவே, இப்பகுதிகளில் விபத்துக்கள் ஏற்படாமல் தடுக்க தற்போது ஓவேலி பகுதியில் வட்டப்பாறை, சூண்டிமலை, பார்வுட், நாயக்கன்பாடி மற்றும் பெரியசோலை ஆகிய ஐந்து இடங்களில் முகாம்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த 5 முகாம்களிலும் 50 வேட்டை தடுப்பு காவலர்கள் மற்றும் அதிகாரிகள் பணியில் இருப்பார்கள். இவர்கள் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள். காட்டு யானைகள் வந்தால், அவைகளை விரட்ட கும்கி யானைகள் பயன்படுத்தப்படும். மேலும், பல புதிய ஒலி தொழில் நுட்பங்கள் பயன்படுத்தி யானைகள் வருவதை கண்டறிந்து பொதுமக்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.  

மேலும், ஓவேலி பகுதியில் உள்ள மக்களை மட்டும் ஒன்று சேர்த்து ஒரு வாட்ஸ் அப் குரூப் துவக்கப்படும். அவர்களுக்கு யானைகள் வருகை குறித்தும், அவைகள் உள்ள இடங்கள் குறித்தும் தகவல் அளிக்கப்படும். மேலும், அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் அதிகாலை நேரங்களில் பணிக்கு செல்வதாலும், மாலையில் இருள் சூழ்ந்த பின்னர் வருவதாலும் இது போன்ற விபத்துக்கள் ஏற்படுகிறது.

எனவே, தேயிலை தோட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி காலை 8.30 மணிக்கு மேல் பணிக்கு செல்லவும், மாலை 5.30 மணிக்குள் பணியில் இருந்து வருவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அதேபோல், தொலை தூரங்களில் மற்றும் யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் உள்ள தொழிலாளர்கள் பாதுகாப்பாக குடியிருப்புக்களுக்கு சென்றடைய ஏற்றவாறு சம்மந்தப்பட்ட தேயிலை தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும். தொழிலாளர்களுக்கு டார்ச் போன்றவைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். யானைகள் நடமாட்டத்தை ட்ரோன் கேமராக்கள் மூலமும் கண்காணிக்கப்படும்.

மேலும், ஓவேலி பகுதியில் ஒரு கமிட்டி அமைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும். பாதிக்கப்பட்டவர்களுக்கு தற்போது உடனடியாக இழப்புத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இங்கு வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தரவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என்றார். இப்பேட்டியின் போது, மாவட்ட எஸ்பி பிரபாகரன், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ், கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம் காரம் ஆகிேயார் உடனிருந்தனர்.

Related Stories: