அரசியல் செய்ய எதுவும் இல்லாததால் மதத்தை வைத்து பழி போட முயற்சி: சென்னை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேச்சு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னையில் 31 ஜோடிகளுக்கு திருமணத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று நேற்று நடத்தி வைத்தார். இந்து சமய அறநிலையத் துறையின் 2022-2023ம் ஆண்டிற்கான மானியக் கோரிக்கையில், “ஒரு இணை ஆணையர் மண்டலத்திற்கு 25 இணைகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 இணைகளுக்கு கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும்.

இதற்கான செலவீனத்தைத் கோயில்களே ஏற்கும்“ என அறிவிக்கப்பட்டது. அதன்படி, சென்னை இணை ஆணையர் மண்டலத்திற்கு உட்பட்ட கோயில்கள் சார்பில் சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயில் திருமண மண்டபத்தில் 31 இணைகளுக்கு  திருமணம் நேற்று நடந்தது. விழாவிற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்து சீர்வரிசைப் பொருட்களை வழங்கி, வாழ்த்தினார். இணைகளுக்கு மாங்கல்யத்துடன் சீர்வரிசைப் பொருட்களாக கட்டில், பீரோ, மெத்தை, தலையணைகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டன.

விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சர் சேகர்பாபுவை பற்றி நான் பலமுறை, அவர் ஒரு “செயல் பாபு” என்று ஏற்கனவே குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறேன். நான் உங்களிடையே வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், இங்கே இருக்கக்கூடிய அமைச்சர்கள் கோபித்து கொள்ள மாட்டார்கள். ஒரு முதல்வர் தான் அமைச்சர்களை வேலை வாங்குவார்கள்.  ஆனால் நம்முடைய அமைச்சர் சேகர்பாபு முதல்வரை வேலை வாங்கக்கூடியவராக விளங்கிக் கொண்டிருக்கிறார்.

ஒரு சிறப்புக்குரிய துறையை பொறுப்பேற்றுக்கொண்டு  அவர் பல்வேறு பணிகளை, பல்வேறு திட்டங்களை, பல்வேறு சாதனைகளை, இதுவரையில் தமிழக வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய வரலாற்றில் மட்டுமல்ல, உலக வரலாற்றில் இந்து சமய அறநிலையத் துறைக்கு இப்படிப்பட்ட சாதனை எங்கேயாவது நடந்திருக்கிறதா என்று கேட்டால், தைரியமாக, தெம்பாக சொல்லலாம், இல்லை தமிழ்நாட்டில் மட்டும் தான் நம்முடைய சேகர்பாபு வைத்துக் கொண்டிருக்கக்கூடிய அந்தத் துறைதான் ஆற்றிக் கொண்டிருக்கிறது என்று கம்பீரமாக நம்மால் சொல்ல முடியும்.

இந்து சமய அறநிலையத் துறையின் சார்பில் பல்வேறு கல்லூரிகளை நம்முடைய அரசு தொடங்கியிருக்கிறது. கொரோனோ நோய்த்தொற்று உச்சத்தில் இருந்த நேரத்தில் நோயாளிகளின் உறவினர்களுக்கு உணவு இலவசமாக வழங்கக்கூடிய பணியையும் இந்தத் துறை செய்தது. அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்படும் 47 கோயில்களில் அன்னை தமிழில் அர்ச்சனை உரிமையை நாம் மீட்டுத் தந்திருக்கிறோம்.

மேலும் பல கோயில்களிலும் இதை விரிவுபடுத்த திட்மிட்டிருக்கிறோம். பெண் ஒருவரை அர்ச்சகராக  நியமித்திருக்கிறோம். கோயில் பொது சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்திருக்கிறோம். 3,700 கோடி ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துகளை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்டெடுத்திருக்கிறோம். இது மிகப் பெரிய வரலாறு. எல்லாவற்றிற்கும் மேலாக, அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக நியமனங்களைச் செய்து முடித்திருக்கிறோம். சமத்துவத்தை விரும்பாத சில சக்திகளின் மூலமாக, எத்தனை தடைகள் வந்தாலும், தொடர்ந்து அதற்கான சட்டப் போராட்டத்தையும் நாம் நடத்திக் கொண்டிருக்கிறோம்.

இதையெல்லாம் குறிப்பிட்ட சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் சேற்றை வாரி இறைக்கிறார்கள். பொய் பித்தலாட்டத்தை அவர்கள் தொடர்ந்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அரசியல் செய்வதற்கு எதுவும் கிடைக்கவில்லை. அதனால் மதத்தை வைத்து நம் மீது இன்றைக்கு பல பழிகளை, குற்றங்களை, குறைகளை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கெல்லாம் ஆதாரம் இருக்கிறதா என்று கேட்டால், எந்த ஆதாரமும் கிடையாது. நம்மை பொறுத்தவரைக்கும் நாம் அண்ணா வழியில், ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணக்கூடியவர்கள். மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்ற அந்த நிலையில் நாம் நம்முடைய பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம்.

அதனுடைய அடையாளம்தான் ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்திருக்கக்கூடிய 31 இணையர்களுக்கு, மணவிழா நிகழ்ச்சியை நாம் நடத்தி முடித்திருக்கிறோம். இந்த 31 பேர் மட்டுமல்ல, இன்றைக்கு 217 இணையர்களுக்கு தமிழ்நாடு முழுவதும் அறநிலையத்துறையின் சார்பில் மணவிழா நிகழ்ச்சி நடந்து கொண்டிருக்கிறது. நீங்கள் மறந்து விடக் கூடாது மன்னராட்சிக் காலமாக இருந்தாலும் சரி, மக்களாட்சிக் காலமாக இருந்தாலும் சரி, கோயில்கள் என்பது மக்களுக்காகத்தான்.

அது எந்த ஆட்சியாக இருந்தாலும் கோயில்கள் என்பது மக்களுக்காகக தான். கோயில்கள் ஒரு சிலருடைய தனிப்பட்ட சொத்து அல்ல. அந்த நிலையை மாற்றத்தான் நீதிக்கட்சிக் காலத்தில் இந்தத் துறை உருவாக்கப்பட்டது. தமிழ்நாட்டில் அதிக கோயில்களுக்கு குடமுழுக்கு செய்யப்பட்டது. அந்த குடமுழுக்கு யாருடைய ஆட்சி காலத்தில் அதிகமாக செய்யப்பட்டது என்றால் தலைவர் கலைஞருடைய ஆட்சி காலத்தில் தான் அதிகம் குடமுழுக்கு செய்யப்பட்டிருக்கிறது.

ஓடாத திருவாரூர் தேரை ஓட்டிய பெருமை நம்முடைய முதல்வராக இருந்த கலைஞருக்கு தான் உண்டு.

பூசாரிகளுக்கு இலவச மிதிவண்டி வழங்கப்பட்டது திமுக ஆட்சி காலத்தில்தான். அந்த வழியில் தான் இப்போது நம்முடைய அரசு சேகர்பாபு பொறுப்பேற்றிருக்கக்கூடிய இந்த துறையின் சார்பில் நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு தன்னுடைய சாதனையை செய்து கொண்டிருக்கிறது.  கோயில் சீரமைப்புப் பணிகளை இதுவரை இல்லாத அளவில் செயல்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

ஆகவே, இது ஏதோ எங்களுக்கு புதுசல்ல, இப்போதும் மட்டுமல்ல, எப்போதும் ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, மக்களுக்காக பணியாற்ற கூடியவர்கள். இன்றைக்கு ஆட்சி என்கின்ற அந்த அதிகாரம், மக்கள் நம்மிடத்தில் நம்பி ஒப்படைத்திருக்கிறார்கள். ஆகவே, மக்களுடைய எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வகையில், அனைவருக்குமான அரசாக இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதை நன்கு உணர்ந்த காரணத்தால் தான் தமிழக மக்கள் ஐந்து முறை கலைஞர் கையில் ஆட்சியை ஒப்படைத்தார்கள். இந்த ஆட்சியை, ஆறாவது முறையாக அவருடைய மகன் இந்த ஸ்டாலின் இடத்தில், யாரிடத்தில், முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் இடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கையை நிறைவேற்றுகின்ற வகையில் நாம் நம்முடைய கடமையை ஆற்றி வருகிறோம்.

இங்கே மணக்கோலம் பூண்டிருக்கக்கூடிய மணமக்கள் எல்லா நலமும் வளமும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும், மணமக்களுக்கு ஒரு அன்பான வேண்டுகோள், நீங்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய உங்கள் குழந்தைகள் ஒன்றோ, இரண்டோ நிறுத்திக்கொள்ள வேண்டும். குடும்பக் கட்டுப்பாட்டுக்காக மத்திய அரசு, மாநில அரசு எவ்வளவோ செலவு செய்து நிதியை ஒதுக்கி பிரசாரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

முன்பெல்லாம், நாம் இருவர், நமக்கு மூவர் என்று சொன்னோம்.  அது படிப்படியாக குறைந்து நாம் இருவர், நமக்கு இருவர். இப்பொழுது நாம் இருவர், நமக்கு ஒருவர், நாளைக்கு இதுவும் மாறலாம், நாம் இருவர், நமக்கேன் இன்னொருவர். நான் ஒரு விளம்பரத்தைப் பார்த்தேன். நாமே குழந்தை, நமக்கேன் குழந்தை. இப்படி எல்லாம் பிரசாரம் இருக்கிறது. இதையெல்லாம், சீர்தூக்கிப் பார்த்து, நாட்டினுடைய நன்மை கருதி, குடும்ப சூழ்நிலையை கருதி, நீங்கள் உங்கள் செல்வங்களைப் பெற்று அதற்கு அழகான தமிழ் பெயர்களை சூட்டுங்கள் என்று அன்போடு  இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன். அதே நேரத்தில், இல்லற வாழ்வில் நீங்கள் சமத்துவத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்,  சமத்துவத்தை, சமூகநீதியை நீங்கள் கடைபிடிக்க வேண்டும் என்று ஏதோ முதலமைச்சராக அல்ல,   உங்களுடைய தந்தை என்கின்ற அந்த இடத்தில் இருந்து உங்களை அன்போடு கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, அன்பரசன், செஞ்சி மஸ்தான், திமுக நாடாளுமன்ற குழுவின் தலைவர் டி.ஆர்.பாலு, தென்சென்னை எம்பி தமிழச்சி தங்கப்பாண்டியன், எம்எல்ஏ ஜே.எம்.எச். அசன் மௌலானா, சென்னை மாவட்ட அறங்காவலர் குழுவின் தலைவர் வழக்கறிஞர் கே.எஸ்.ரவிச்சந்திரன், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தரமோகன், இந்துசமய அறநிலையத் துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன், கூடுதல் ஆணையர் திரு.இரா.கண்ணன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு உயர் அலுவலர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சென்னை மண்டலங்களுக்குட்பட்ட 31 இணைகளுக்கு திருவான்மியூர் மருந்தீசுவரர் கோயிலில் திருமணம் நடைபெற்றது. இதனையும் சேர்த்து தமிழகம் முழுவதும் உள்ள 20 மண்டலங்களில் 217 ஜோடிகளுக்கு நேற்று திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

Related Stories: