ஓடும் காரில் தீ; 3 பேர் தப்பினர்

போச்சம்பள்ளி: தர்மபுரி கோட்டை தெருவை சேர்ந்தவர் கணேசன். இவர் தனது உறவினர்களான அண்ணப்பூரணி, மலர் ஆகியோருடன் கிருஷ்ணகிரி மாவட்டம் கள்ளிப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு காரில் வந்தார். பின்னர் அகரத்தில் உள்ள ஜோசியரிடம் ஜாதகம் பார்த்து விட்டு 3 பேரும் தர்மபுரி நோக்கி நேற்றிரவு சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது தட்ரஅள்ளி கூட்ரோடு பகுதியில் கார் சென்றபோது திடீரென முன்பகுதியில் புகை வந்துள்ளது.

இதனால் காரை நிறுத்தி விட்டு 3 பேரும் கீழே இறங்கினர். சிறிது நேரத்திலேயே காரில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. அதனை அணைக்க முயன்றும் முடியாததால் போச்சம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடம் விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

ஆனால் கார் முழுவதும் எரிந்து நாசமானது. தொடர்ந்து எதனால் தீவிபத்து ஏற்பட்டது என நாகரசம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் காரிமங்கலம்-அகரம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Related Stories: