தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வில் மாநில அளவில் சாதனை படைத்த மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

நாகப்பட்டினம்: தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வில் மாநில அளவில் முதலிடம் பெற்ற மாணவியை தனது இருக்கை அருகே அமர வைத்து நாகப்பட்டினம் கலெக்டர் அருண்தம்புராஜ் வாழ்த்துகள் தெரிவித்தார். பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்கள் மத்தியில் இலக்கிய ஆர்வத்தை அதிகரிக்கும் நோக்கில் 11ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தமிழ் மொழி இலக்கிய திறனாய்வு தேர்வு கடந்த அக்டோபர் மாதம் நடத்தப்பட்டது. இதில் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளியைச் சேர்ந்த 1 லட்சத்து 18 ஆயிரம் மாணவர்களும், தனியார் பள்ளியைச் சேர்ந்த ஒரு லட்சத்து 32 ஆயிரம் மாணவர்கள் என மொத்தம் 2 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்கள் தேர்வு எழுதினர். இதில் நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் அபிநயா மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளார்.

நாகப்பட்டினம் மாவட்டத்தில் இருந்து 24 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் ஆயக்காரன்புலத்தில் உள்ள 3 அரசு மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவர்கள் 13 பேர் தேர்ச்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 100க்கு 97 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு பெருமை சேர்ந்த மாணவி அபிநயாவை நேற்று கலெக்டர் அருண்தம்புராஜ் கலெக்டர் அலுவலகத்திற்கு வரவழைத்தார். தனது பெற்றோர், ஆசிரியர்களுடன் மாணவி அபிநயா கலெக்டர் அலுவலகம் வந்தார். உடனே கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் உள்ள இருக்கை தனது அருகே உள்ள மற்றொரு இருக்கையில் மாணவியை அமரும்படி கூறினார். இதை தொடர்ந்து மாணவியின் வெற்றிக்கு காரணம் குறித்து கலெக்டர் கேட்டார். பின்னர் மாணவி அபிநயாவை இருக்கையில் அமர வைத்து கலெக்டர் அருண்தம்புராஜ் பொன்னாடை அணிவித்து புத்தகம் மற்றும் பூங்கொத்து கொடுத்து பாராட்டினார்.

Related Stories: