அரசியல் செய்வதற்கு ஏதுவும் கிடைக்காததால் மதத்தை வைத்து குறைகளை திமுக ஆட்சி மீது சொல்கிறார்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை

சென்னை: அரசியல் செய்வதற்கு ஏதுவும் கிடைக்காததால் மதத்தை வைத்து குறைகளை திமுக ஆட்சி மீது சொல்கிறார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.  மாவட்டக் கழகத்தினுடைய செயலாளர், சட்டமன்ற உறுப்பினராக இருக்கக்கூடிய சுந்தர் அவர்கள் இல்லத்தில் நடைபெறக்கூடிய திருமண விழா என்று சொல்வதைவிட, இது நம்முடைய இல்லத்தில் நடைபெறக்கூடிய மணவிழாவாக நான் கருதி, இந்த நிகழ்ச்சிக்கு நான் மட்டுமல்ல, மேடையில் இருக்கக்கூடியவர்கள் மட்டுமல்ல, நீங்களும் அந்த உணர்வோடுதான், இங்கு வந்திருக்கிறீர்கள். நன்றியுரையாற்றுகிறபோது சுந்தர் சொன்னார், பல்வேறு சிரமங்களுக்கிடையிலே, பணிச்சுமைக்களுக்கிடையிலே நான் வந்திருப்பதாக. நான் சொல்வது எனக்கு ஏற்படக்கூடிய பணிச்சுமைகள், பல்வேறு சிரமங்கள், அதற்கெல்லாம், ஒரு ஊக்கத்தை, உற்சாகத்தைத் தரக்கூடிய வகையில், இது போன்ற திருமண நிகழ்ச்சிகள்தான் எனக்கு அமைகிறது என்று கூறியுள்ளார்.

அதுவும் கழகத்தோழர்கள் எல்லாம் ஒன்றுகூடி. ஒரு கழக தூய செயல்வீரருடைய இல்லத்தில் நடைபெறக்கூடிய மணவிழா நிகழ்ச்சிக்கு வருகின்றபோது, அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், ஆடம்பர நிகழ்ச்சியாக இருந்தாலும், இந்த நிகழ்ச்சிக்கு ஈடு இணை எதுவும் கிடையாது என்கின்ற உணர்வோடு, நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். சுந்தர் அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய குடும்பம் என்கின்ற அந்த உறவோடு, தன்னை இணைத்துக் கொண்டவர், பேரறிஞர் அண்ணா அவர்களுடைய காலத்திலேயே மலர்ந்து, தலைவர் கலைஞர் அவர்களுடைய காலத்திலே வளர்ந்து, என்னுடன் தொடர்ந்து இன்றைக்கு இந்த இயக்கத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடியவர் நம்முடைய சுந்தர் அவர்கள்.ஒரு சுந்தர் அல்ல. இலட்சக்கணக்கான சுந்தர்கள் இந்த இயக்கத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கக்கூடிய காரணத்தால்தான் இந்த இயக்கத்தை எந்த கொம்பனாலும், தொட்டு கூட பார்க்க முடியாது என்கின்ற உணர்வோடு கம்பீரமாக இந்த இயக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

நம்முடைய சுந்தர் அவர்களைப் பற்றி சொல்ல வேண்டுமென்று சொன்னால், இந்தி ஆதிக்கத்தை எதிர்த்து நின்ற கழக இளைஞர்களின் படைவரிசையில் ஒருவராக விளங்கியவர் நம்முடைய சுந்தர் அவர்கள். 1965-ஆம் ஆண்டு நடைபெற்ற எழுச்சி மிக்க போர்க்களத்தில் தன்னை இணைத்துக்கொண்டவர்.அன்று என்று மட்டுமல்ல, இன்றைக்கும் அந்த போர்க்களம் என்றைக்கு எதிர்பார்த்துக்காத்துக் கொண்டிருக்கக்கூடியவர் நம்முடைய சுந்தர் அவர்கள். ஜனநாயக அறப்போர்க்களமாக இருந்தாலும் சரி அல்லது தேர்தல் களமாக இருந்தாலும் சரி, 1967 முதல் 2022 வரை ஒரே தொகுதியிலே நின்று வென்றவர் நம்முடைய சுந்தர் அவர்கள். அதனை தலைவர் கலைஞர் அவர்கள் உணர்ந்த காரணத்தால்தான் அதற்கேற்ற வெகுமதியை தலைவர் கலைஞர் அவர்கள் அவருக்கு பல்வேறு காலக்கட்டங்களில் வழங்கிக் கொண்டிருந்திருக்கின்றார்.

1989-இல் உத்திரமேரூர் ஒன்றிய கழகத்தினுடைய செயலாளர், 1997 முதல் 2000 வரை மாவட்ட கழகத்தினுடைய துணைச் செயலாளர், 2000 முதல் 2015 வரை மாவட்டக் கழகத்தினுடைய அவைத் தலைவர். 2015 முதல் தொடர்ந்து மாவட்டக் கழகச் செயலாளராக இருக்கிறார். இரண்டாவது முறையாக இந்தப் பொறுப்பில் அவர் நீடிக்கிறார். 1989-இல் முதல் முறையாக சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத்தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே ஆண்டுதான் நானும் முதன்முதலில் ஆயிரம் விளக்கு தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டேன். அந்த வகையில் சுந்தர் அவர்கள் என்னுடைய Batchmate என்று பெருமையோடு சொல்லலாம். அவரும் சொல்லலாம், நானும் சொல்லலாம்.1997-இல் மீண்டும் சட்டமன்ற உறுப்பினர். அப்போது உத்திரமேரூர் ஒன்றியத்தினுடைய பெருந்தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பேரறிஞர் அண்ணா தலைமையில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுடைய தலைமையில் நம்முடைய கழகம் ஆட்சிக்கு வருகிற போதெல்லாம், தமிழ்நாடு புத்துணர்ச்சியும், புத்தெழுச்சியும் பெறக்கூடிய மாநிலமாகத் திகழ்ந்து கொண்டிருக்கிறது. அதேபோல, இப்போதும் மீண்டும் தமிழ்நாடு தலை நிமிர்ந்து நடைபோடுகிறது. இங்கே மணக் கோலத்தில் வீற்றிருக்கக்கூடிய வெற்றிச்செல்வன் அவர்கள் எப்படி சுந்தர் அவர்கள் தன்னை அரசியலில் ஈடுபடுத்திக் கொண்டு பணியாற்றிக் கொண்டிருக்கிறாரோ, அதேபோல் 2000-ஆம் ஆண்டிலே கழகத்தில் உறுப்பினராக சாலவாக்கம் பகுதியில் தன்னை இணைத்துக்கொண்டு, தற்போது ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளராக இருந்து அவர் பணியாற்றிக் கொண்டிருக்கிறார்.

இதுகூட வாரிசு, வாரிசு என்று சொல்வார்கள், எங்களுக்கு வாரிசு இருக்கிறது, அதை கம்பீரமாக வாரிசு என்று நாங்கள் சொல்கிறோம். அதுதான் குடும்பப் பாச உணர்வு. இதைத்தான் அண்ணா அவர்கள் இந்த இயக்கத்தை குடும்பப் பாச உணர்வோடு உருவாக்கித் தந்திருக்கிறார்கள். ஆக, அந்த இளைஞரணியில் பணியாற்றிக் கொண்டிருக்கிறார். நானும் இளைஞரணியில் இருந்துதான் இன்றைக்கு இந்த இடத்தில் வந்து உட்கார்ந்திருக்கிறேன். இந்த இடத்தில் ஒரு மிகப்பெரிய பொறுப்பை அன்போடு, உங்கள் ஒத்துழைப்போடு, உங்கள் உழைப்போடு நான் பெற்றிருக்கிறேன்.ஆகவே, அப்படிப்பட்ட இளைஞரணியில் தம்பி வெற்றிச்செல்வன் அவர்கள் பொறுப்பேற்று பணியாற்றிக் கொண்டிருக்கிறார். ஆகவே, மணமகளும் அவருடைய குடும்பத்தாரும் இனி நம்முடைய குடும்பத்தினர். அந்த உணர்வோடுதான் இந்த திருமண விழா நடைபெறுகிறது.

இந்த சுயமரியாதைத் திருமணத்தைப் பற்றி நம்முடைய பொதுச் செயலாளர் பேசுகிறபோது குறிப்பிட்டுச் சொன்னார். ஆம், ஏற்கனவே 1967-க்கு முன்னால் இப்படிப்பட்ட திருமணங்கள், சீர்திருத்தத் திருமணங்கள், சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணங்கள் நடைபெறுகிறது என்று சொன்னால், அதை கேலி செய்தவர்கள், கிண்டல் செய்தவர்கள், விமர்சனம் செய்தவர்களெல்லாம் நாட்டில் உண்டு. ஆனால் இன்றைக்கு, சீர்திருத்தத் திருமணம் நடக்கிறதென்றால் யாரும் ஆச்சரியப்படுவதில்லை. அந்த அளவிற்கு இன்றைக்கு பிரபலமாக சீர்திருத்தத் திருமணங்கள் நடந்து கொண்டிருக்கிறது.

1967-ஆம் முன்னேற்றக் ஆண்டு ஆட்சி முதன்முதலில் தமிழ்நாட்டில் பொறுப்பேற்றபோது, அறிஞர் திராவிட அண்ணா கழக முதலமைச்சராக பொறுப்பேற்றபோது, சட்டமன்றத்திற்குள் நுழைந்து மூன்று தீர்மானங்களைக் கொண்டுவந்து ஏகமனதாக நிறைவேற்றித் தந்தார் என்று சொன்னால், அந்த மூன்றில் ஒன்று தான் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாகும் என்ற அந்த அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தார். இது சீர்திருத்தத் திருமணம் மட்டுமல்ல, சுயமரியாதை உணர்வோடு நடைபெறக்கூடிய திருமணமாக மட்டுமல்ல, இது நம்முடைய தாய் தமிழாம் தமிழ்த் திருமணம் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

அப்படிப்பட்ட தமிழ் மொழிக்கு, செம்மொழி என்கிற அங்கீகாரத்தையும் பெற்றுத் தந்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். அப்படிப்பட்ட இந்த அழகான தமிழ் மொழியில் நடைபெறக்கூடிய இந்தத் திருமணத்தில் உங்களோடு சேர்ந்து நானும் கலந்துகொண்டு, மணமக்களை மனதார வாழ்த்துகிறேன், போற்றுகிறேன், எல்லா நன்மைகளையும் பெற்று சிறப்போடு வாழ்ந்திட வேண்டும். புரட்சிக்கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லியிருக்கக்கூடிய வீட்டுக்கு விளக்காய் நாட்டிற்கு தொண்டர்களாய் மணமக்கள் வாழ்க! வாழ்க! வாழ்க! என்று வாழ்த்தி, அதே நேரத்தில், சுந்தர் ஆற்றக்கூடிய பணிகளை என்னால் நிச்சயமாக மறக்கவும் முடியாது, மறுக்கவும் முடியாது. இந்த இயக்கத்திற்கு அவர் ஆற்றக்கூடிய அந்தப் பணிகள் மேலும், மேலும் வளரவேண்டும் என்ற அந்த உணர்வோடு தான், நான் மணமக்களை வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

Related Stories: