இந்தோனேசியா கால்பந்து மைதானத்தில் பயங்கர மோதல்; உயிரிழந்தோர் எண்ணிக்கை 174 ஆக உயர்வு.! 200 பேர் படுகாயம்; கண்ணீர் புகை குண்டு வீச்சு

ஜகார்த்தா: இந்தோனேசியாவில் நடந்த கால்பந்து போட்டியில் ரசிகர்களுக்கு இடையே நடந்த பயங்கர மோதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது. 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். லீக் போட்டிகள் ரத்து செய்யப்பட்டன. அரேமா எஃப்சி அணி விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளதால் அங்கு பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவாவில் உள்ள கஞ்சுருஹான் ஸ்டேடியத்தில்  அரேமா எஃப்சிக்கும், பெர்செபயா சுரபயாவுக்கும் இடையிலான கால்பந்து போட்டி  நடைபெற்றது. அரேமா எஃப்சி அணியை  3-2 என்ற கோல் கணக்கில் தோற்கடித்து பெர்செபயா சுரபயா வெற்றி பெற்றது.

இந்த தோல்வியை  ஏற்றுக் கொள்ள முடியாத அரேமா எஃப்சி அணியின் ரசிகர்கள், பார்வையாளர்கள் மேடையில் இருந்து திடீரென மைதானத்திற்குள் புகுந்தனர். அவர்களுக்கு எதிராக சுரயாபா அணியினரும் மைதானத்திற்குள் புகுந்தனர். இதனால் இருதரப்பு ரசிகர்களுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. நிலைமை எல்லை தாண்டி வன்முறையாக மாறியதால், பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். இருந்தும் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரமுடியவில்லை. இருதரப்பு ரசிகர்களும் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். கூட்ட நெரிசலில் சிக்கியதால் பலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.

தொடர்ந்து போலீஸ் தரப்பில் கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டதால் எங்கு செல்வது என்றே தெரியாமல் மைதானத்திற்குள் பலர் சிக்கித் தவித்தனர். நூற்றுக்கணக்கானோர் ஒரே சமயத்தில் மோதிக் கொண்டதால் 50க்கும் மேற்பட்டோர் ஆடுகளத்திலேயே மிதிபட்டு இறந்தனர். நூற்றுக்கணக்கானோர் படுகாயத்துடன் ஆடுகளத்தில் இருந்து தப்பி ஓடினர். அவர்கள் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுகுறித்து  ஜாவா போலீஸ் தலைவர் நிகோ அஃபின்டா கூறுகையில், ‘கிழக்கு ஜாவா மாகாணத்தில் நடந்த கால்பந்து போட்டியில் இரு அணியின் ரசிகர்களுக்கு இடையே நடந்த மோதலில் இதுவரை 129 பேர் உயிரிழந்தனர். 180 பேர் காயமடைந்தனர்.

ஆடுகளத்தின் மைதானத்தில் 34 பேர் உயிரிழந்தனர். 93 பேர் மருத்துவமனையில் இறந்தனர். 200 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இருதரப்பு மோதலால் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. இதனால் 13 வாகனங்கள் சேதமடைந்தன. வன்முறையை கட்டுப்படுத்த கண்ணீர் புகை குண்டு வீசப்பட்டது. பாதுகாப்பு படையினருக்கும் ரசிகர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இரண்டு போலீஸ்காரர்கள் இந்த சம்பவத்தில் பலியானார். நிலைமை தற்போது கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது’ என்றார். இதுகுறித்து இந்தோனேசியாவின் கால்பந்து சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ‘மைதானத்தில் என்ன நடந்தது என்பது குறித்து உயர்மட்ட விசாரணை நடைபெற்று வருகிறது; திடீரென ரசிகர்களுக்கு இடையே நடந்த அசம்பாவித சம்பவத்தால், ஒரு வாரத்திற்கு லீக் போட்டிகள் நிறுத்தி வைக்கப்படுகிறது.

தற்போது நடந்துள்ள சம்பவம், இந்தோனேசிய கால்பந்தின் முகத்தில் கறையை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இந்த சீசன் முழுவதும் அரேமா எஃப்சி அணி போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியா கால்பந்து போட்டியில் ஏற்பட்ட வன்முறை சம்பவம் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. விளையாட்டு போட்டியில் வெற்றி - தோல்வியை சமமாக எடுத்துக் கொள்ளும் பக்குவம் ரசிகர்களிடம் இல்லாததால் இதுபோன்ற வன்முறை நடந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்களுக்கு இடையே நடந்த பயங்கர மோதலால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 174 ஆக உயர்ந்துள்ளது.

Related Stories: