கல்பாக்கம் அருகே தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் அதிரடி கைது: உறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு

சென்னை: கல்பாக்கம் அருகே தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை கைது செய்தனர். கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினத்தில் இயங்கி வரும், தனியார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில், சில ஆண்டுகளாக கடலூர் கிராமத்தை சேர்ந்த மணிமாறன் (45), தமிழ் ஆசிரியராக  பணிபுரிந்து வருகிறார். இவர், 8ம் வகுப்பு  மாணவி ஒருவரிடம் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். அதேபோல், நேற்று முன்தினமும்  பாலியல் சீண்டலில் ஈடுபட முயன்றதாக மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள், பொதுமக்கள்  நேற்று  காலை பள்ளிக்கு வந்து, சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி நிர்வாகத்திடம்  புகார் அளித்துள்ளனர். ஆனால், பள்ளி நிர்வாகம் ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க மறுத்ததாக கூறப்படுகிறது. ஆத்திரமடைந்த மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் கல்பாக்கம் இசிஆர் சாலையில், மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த மாமல்லபுரம் டிஎஸ்பி ஜெகதீஸ்வரன் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததால்  அனைவரும் கலைந்து சென்றனர். சாலை மறியலால் சென்னை - புதுச்சேரி இசிஆர் சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மாணவியின்  பெற்றோர் மற்றும் உறவினர்கள்  சாலை மறியல் போராட்டத்திற்கு பின், ஆசிரியர்  மணிமாறனை மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார்  கைது செய்தனர். பின்னர், அவரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இதுபோன்று வேறு மாணவிகளுக்கும் பாலியல் தொல்லை கொடுத்தாரா என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘ஆசிரியர் மணிமாறன் பள்ளியில் தொடர்ந்து பெண் பிள்ளைகளிடம் ஆபாசமாக பேசுவதும், பாலியல் சீண்டல்களில் ஈடுபடுவதும் நீண்ட நாட்களாக நடந்து வந்துள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிக்கு கடந்த 3 மாதமாக உடல் ரீதியாகவும், ஆபாச வார்த்தைகளை பேசியும் தொல்லை கொடுத்துள்ளார். இதுபற்றி வேறு யாரிடமாவது சொன்னால் உன்னை தொலைத்து விடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

பள்ளி நிர்வாகத்திடம் பலமுறை பெற்றோர்கள் புகார் தெரிவித்தும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை. இதை ஆரம்பத்திலேயே தடுத்திருந்தால், இதுபோன்ற நிலை வந்திருக்காது. இனி வரும் காலங்களிலாவது பள்ளி மாணவிகளுக்கு உரிய பாதுகாப்பை நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்’ என்றனர்.

Related Stories: