ஆன்லைன் ரம்மியால் கடன்: சொந்த வீட்டில் 50 பவுன் திருடிய பாதிரியார் மகன்

திருவனந்தபுரம்: ஆன்லைன் ரம்மியால் ஏற்பட்ட கடனை தீர்க்க, சொந்த வீட்டில் 50 பவுன் நகை, பணத்தை திருடிய பாதிரியாரின் மகனை போலீசார் கைது செய்தனர். கேரள  மாநிலம், கோட்டயம் அருகே உள்ள பாம்பாடி பகுதியை சேர்ந்தவர் ஜேக்கப் நைனான். திருக்கோதமங்கலம் தூயமேரி பெத்தலகேம் கிறிஸ்தவ ஆலயத்தில்  பாதிரியாராக உள்ளார். இவரது மகன் ஷைனோ (36). வீட்டுக்கு அருகிலேயே நிதி  நிறுவனம் நடத்துகிறார். ஆன்லைன் ரம்மி விளையாடுவதில் அடிமையாகி கிடந்தார்.

இதனால், கடன் அதிகமாக ஏற்பட்டது. 2 தினங்களுக்கு முன் நைனானும், அவரது  மனைவியும் வெளியே சென்றனர். திரும்பி வந்தபோது பீரோ திறந்து கிடந்தது. 50 பவுன் நகை, ரூ.1.10  லட்சம் பணத்தை காணவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரித்தனர். அப்போது, திருடப்பட்ட  நகையில் 21 பவுன் வீட்டின் அருகே உள்ள குறுகலான சந்தில் கிடந்தது.

கொள்ளையர்கள் இப்படி கீழே போட்டு செல்ல வாய்ப்பு இல்லை என கருதிய போலீசார், ஷைனோவை சந்தேகித்தனர். அவரிடம் விசாரித்தபோது நகை, பணத்தை திருடியதை  ஒப்புக் கொண்டார். கடனை தீர்க்க திருடியதாக கூறிய அவர், நகைகளை புதைத்து வைத்திருந்த இடத்தை காட்டினார். அவரை கைது செய்த போலீசார், கோட்டயம்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories: