அதிமுக ஆட்சியில் போலி பில் தயாரித்து முறைகேடு நெல் கொள்முதல் மோசடியில் ஈடுபட்ட மண்டல அதிகாரி உட்பட 3 பேர் கைது

* வேலூரில் சிபிசிஐடி அதிரடி; மேலும் 3 பேர் கோர்ட்டில் சரண்

* வேலூர் உட்பட 4 மாவட்டங்களில் தொடர் பரபரப்பு

வேலூர்: அதிமுக ஆட்சியில், நெல் கொள்முதல் செய்யாமலேயே போலி பில் தயாரித்து மோசடியில் ஈடுபட்ட வழக்கில், சிபிசிஐடி போலீசாரின் கைது நடவடிக்கை தொடரும் நிலையில், மண்டல துணை மேலாளர் உள்ளிட்ட மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் 3 கண்காணிப்பாளர்கள் வேலூர் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதனால் வேலூர் உட்பட 4 மாவட்டங்களில் தொடர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் விவசாயிகள் விளைவிக்கும் நெல், நுகர்பொருள் வாணிப கிடங்கு மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, பின்னர் அரிசியாக மாற்றப்பட்டு ரேஷன் கடைகள் மூலமாக மக்களுக்கு விநியோகம் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையங்களில் பணிபுரியும் அதிகாரிகள் கொள்முதல் செய்யாத நெல்லுக்கு போலி பில் தயாரித்து பல லட்சம் மோசடி செய்திருப்பதாகவும், கொள்முதல் செய்த நெல் மூட்டைகளுக்கு விவசாயிகளிடமிருந்து கமிஷன் வாங்கியதாகவும் புகார்கள் எழுந்தது. குறிப்பாக கடந்த 2020ம் ஆண்டில் அதிகளவு முறைகேடு நடந்திருப்பதாக சிபிசிஐடி போலீசாருக்கு புகார்கள் சென்றது.

இதையடுத்து சிபிசிஐடி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மாவட்டங்களில் அடுத்தடுத்து அதிகாரிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இந்த வழக்கு தொடர்பாக சிபிசிஐடி டிஎஸ்பி கவுதமன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி ஆகியோர் வேலூர் நுகர்பொருள் வாணிப கழகத்தில் விசாரணை நடத்தி வந்தனர். அப்போது வேலூர் நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றி வரும் செங்கல்பட்டு மாவட்டம் அன்னை சத்யா நகரை சேர்ந்த மண்டல துணை மேலாளர் விஜயகுமார்(51), கண்காணிப்பாளர்களான வேலூரை சேர்ந்த சுரேஷ்பாபு(49), தொரப்பாடியைச் சேர்ந்த கனிமொழி(41) ஆகியோருக்கும் முறைகேட்டில் தொடர்பு இருப்பது உறுதியானது. இவர்கள் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் செய்யாமலே அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் நெல் வாங்கியது போல, போலி பில் தயாரித்து அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தி உள்ளனர். இதுமட்டுமின்றி ஒரு மூட்டைக்கு ரூ.5 கமிஷனும் வசூலித்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி, வழக்குப்பதிவு செய்து மண்டல துணை மேலாளர் விஜயகுமார், கண்காணிப்பாளர்கள் சுரேஷ்பாபு, கனிமொழி ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் கைது செய்தார். இந்நிலையில், வேலூர் ஜேஎம்3 கோர்ட்டில் மேலும் 3 கண்காணிப்பாளர்கள் குப்புசாமி, ஏழுமலை, சுப்பிரமணி ஆகியோர் நேற்று முன்தினமே சரண் அடைந்தனர். அவர்கள் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை கஸ்டடியில் எடுத்து விசாரிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே இந்த வழக்கில் வேலூர் மண்டல மேலாளராக இருந்த நாகராஜன் கடந்த சில மாதங்கள் முன்பு கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் பலரை கைது செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக சிபிசிஐடி போலீசார் தெரிவித்தனர். இதனால் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் நெல் கொள்முதல் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.

* இதுவரை 23 பேர் சிறையில் அடைப்பு

வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் நெல் கொள்முதல் முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் இதுவரை 18 பேரை சிபிசிஐடி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் கோர்ட்டில் சரணடைந்த 3 பேர் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், இதுவரை 21 பேர் சிக்கியுள்ளனர். அதேபோல் திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அதன்படி 4 மாவட்டங்களில் மொத்தம் 23 பேர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: