திம்மையன் பேட்டை ஊராட்சியில் கைபம்பு; இங்கே... தண்ணீர் எங்கே...? சீரமைக்க இருளர் மக்கள் வேண்டுகோள்

வாலாஜாபாத்: திம்மையன் பேட்டை ஊராட்சியில்  பயன்பாடில்லாத நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ள கைபம்பு செயல்பாட்டிற்கு கொண்டு வர,  இருளர் இன குடும்பங்கள் கோரிக்கை வைத்துள்ளனர். வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்டது திம்மையன் பேட்டை ஊராட்சி.  இந்த ஊராட்சியின் ஒன்றிய பள்ளி அருகாமையில் இருளர் குடியிருப்பு உள்ளது. இங்கு 18 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், நாள்தோறும் விறகு வெட்டுதல், பள்ளம் தோண்டுதல் உள்ளிட்ட அன்றாட சிறு, சிறு கூலி வேலைகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், குடிசை வீடுகளில் வசித்து வரும் இவர்களுக்கு  பாரத பிரதமர் வீடு கட்டும் திட்டத்தின் கீழ் 2017ம் ஆண்டு ஐந்து காங்கிரட் வீடுகள் கட்டித் தரப்பட்டன.  மீதமுள்ள 13 குடும்பத்தாருக்கு இன்று வரை வீடுடின்றி,  ஒரே வீட்டில் இரண்டு, மூன்று குடும்பங்களாக இட நெருக்கடியில் வசித்து வருகின்றனர்.

மேலும், இங்கு வசிக்கும் மக்களுக்கு அடிப்படை வசதிகளான கழிவறை, குடிநீர் உள்ளிட்ட எந்தவித அடிப்படை வசதிகளும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் செய்து தரவில்லை. இதுகுறித்து அவர்கள் கூறுகையில், வாலாஜாபாத் ஒன்றியம் திமையன் பேட்டை ஊராட்சியில் 18க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறோம்.  எங்கள் குடியிருப்பு பகுதியில்  ஒரே ஒரு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில், ஊராட்சி விநியோகிக்கும் குடிநீர் 18 குடும்பங்களுக்கும் தேவையான அளவிற்கு குடிநீர் கிடைப்பதில்லை. அப்படியே குழாயில் குடிநீர் வந்தாலும், 10 நிமிடத்திலேயே நின்று விடுகின்றன. இதனால், அந்த தண்ணீரை தேவைக்காக குடிக்கவோ அல்லது அத்தியாவசிய தேவைக்காகவோ பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. தேவைக்கேற்ப குடிநீர் எடுக்க வேண்டும் எனில், அருகாமையில் உள்ள மின் மோட்டார் பம்புகளை தேடி செல்ல வேண்டிய  நிலை உள்ளது.

அவ்வாறு, தண்ணீர் எடுக்க செல்லபோகும் இடத்தில் உங்கள் பகுதியில் உள்ள குழாய்களில் தண்ணீர் வருவது இல்லையா என கேள்விமேல், கேள்வி கேட்டு சில நேரங்களில் வாய்தகராறுகளும் ஏற்படுகின்றன. இதுகுறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்து இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. மேலும், குடிநீர் பிரசினையை போக்க  எங்கள் பகுதியிலேயே கடந்த  5 மாதங்களுக்கு முன்பு கை பம்ப் அமைத்தனர். ஆனால், இதுவரை கைபம்பில் தண்ணீர் வருவதில்லை. ஏன் என்று எங்களுக்கும் தெரிய வில்லை.

மேலும், பயன்பாடின்றி முள்புதர்கள் சூழ்ந்து காணப்படுவதற்கு முன்பு பல லட்சங்கள் செலவு செய்து போடப்பட்ட இந்த கை பம்பு கிடப்பில் போடப்பட்டுள்ளது. இது போன்ற சூழ்நிலையில் மாவட்ட கலெக்டர் ஆர்த்தி எங்கள் பகுதியில் நேரில் வந்து ஆய்வு செய்து,  அடிப்படை வசதிகளை மேம்படுத்தியும், பயன்பாடின்றி கிடக்கும் கை பம்பை சீரமைத்து தரவேண்டும். அதேநேரத்தில், 5 வீடுகளில் 18 குடும்பங்கள் வசித்து வரும் நிலையில் அரசு கவனம் செலுத்தி, கூடுதல் வீடுகளை ஒதுக்கிடு செய்து கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.

Related Stories: