முழுக்கமுழுக்க தனியார் மயமாக்கும் நோக்கம்...விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் பாதிக்கப்படும்..: அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு

சென்னை: ஒன்றிய அரசின் மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு தமிழ்நாடு அரசு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிக்கும் என்று மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்தநிலையில், மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களிடம் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ஒன்றிய அரசின் சட்ட திருத்தமானது ஏழை, எளிய மக்கள், நெசவாளர்கள், விவசாயிகளை கடுமையாக பாதிக்கும் என கூறினார்.  

அதனையடுத்து பேசிய அவர், நாடாளுமன்றத்தில் மின்சார சட்ட திருத்த மசோதாவுக்கு திமுக சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளோம். ஏற்படும் பாதிப்பு என்ன என்பது தெரிந்தே ஒன்றிய அரசு சட்ட திருத்தத்தை கொண்டுவந்துள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டினார்.  

முழுக்கமுழுக்க தனியார் மயமாக்கும் நோக்கம்:

மின் விநியோகத்துக்கான அரசின் கட்டமைப்பை தனியாருக்கு தாரைவார்க்கும் நோக்கில் சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிக லாபம் வரும் இடங்களில் மின் விநியோக உரிமைகளை தனியார் பெற்றுக் கொள்ளும் வகையில் சட்டம் நிறுத்தப்படுகிறது என அவர் தெரிவித்தார்.

விவசாயிகளுக்கு இலவச மின்சார திட்டம் பாதிக்கப்படும்:

இலவச மின்சாரம் பெற்றுவரும் விவசாயிகள், நெசவாளர்கள், விசைத்தறியாளர்கள் குடிசை வாழ் மக்கள் அனைவருக்கும் பாதிப்பு ஏற்படும். மாநிலங்களின் மின்சார ஒழுங்குமுறை வாரிய ஆணைய அதிகாரங்களை ஒன்றிய அரசு பறித்துக் கொள்ளும் நிலை உள்ளது. மேலும் ஒன்றிய அரசின் உத்தரவுகளை செயல்படுத்தாத மாநிலங்களுக்கு விதிக்கப்படும் அபராதம் 100 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதுவரை ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்ட இடத்தில் இனி 1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

மாநில அரசின் உரிமையை பறிக்கும் சட்ட திருத்தம்:

மாநில அரசின் மின்சார வாரியங்களின் உரிமையை பறிக்கும் வகையில் ஒன்றிய அரசு சட்டத்திருத்தம் கொண்டு வருகிறது. மின்சார சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியுள்ளார். மேலும் தொடர்ந்து மின்சார சட்ட திருத்த மசோதாவை தமிழ்நாடு அரசு எதிர்க்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

மின்சார சட்ட திருத்த மசோதாவை அதிமுக எதிர்க்குமா?:

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மின்சார சட்ட திருத்த மசோதாவை அதிமுக எதிர்க்குமா என்று அமைச்சர் செந்தில் பாலாஜி கேள்வி எழுப்பியுள்ளார். 

Related Stories: