செஸ் ஒலிம்பியாட் தொடரின் 10வது சுற்று போட்டிகள் தொடங்கின: பதக்க வாய்ப்பை உறுதி செய்யுமா இந்திய அணி?

சென்னை: மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் 10வது சுற்று போட்டிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.  ஓபன் பிரிவில் இந்திய ஏ அணி ஈரான் அணியை எதிர்த்து மோதுகிறது. இந்திய பி அணி உஸ்பெகிஸ்தானையும், இந்திய சி அணி ஸ்லோவேகியாவையும் எதிர்கொள்கின்றன. மகளிர் பிரிவில் இந்திய அணிகள் கஜகஸ்தான், நெதர்லாந்து, ஸ்வீடான் அணிகளை சந்திக்கின்றன. பொதுப் பிரிவில் இந்திய பி அணி, புள்ளிகள் பட்டியலில் 15 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது.

பொதுப் பிரிவில் இந்திய வீரர்கள் சசிகிரண், ரோனக் சத்வானி, அபிஜித் குப்தா ஆகியோருக்கு இன்று ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் பிரிவில் ஹரிகா, சவுமியா சாமிநாதன், விஸ்வா இன்று விளையாடவில்லை. இன்றைய சுற்றில் இந்திய அணி வெற்றிபெறும் பட்சத்தில் பதக்கத்தை உறுதி செய்ய வாய்ப்புள்ளது. மாமல்லபுரத்தில் நடைபெற்று வரும் 44வது செஸ் ஒலிம்பியாட் தொடர் நாளையுடன் நிறைவு பெறுகிறது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை மாலை 6 மணிக்கு நிறைவு விழா பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமை வகிக்கிறார். இதில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி, இந்திய செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்த், சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச், ஆசியன் செஸ் பெடரேசன் தலைவர் ஷேக் சுல்தான் பின் கலீபா அல் நஹ்யான், ஆல் இந்தியா செஸ் பெடரேசன் தலைவர் சஞ்சய் கபூர், பாரத் சிங் சவுஹான், அமைச்சர் மெய்யநாதன் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விருந்தினர்கள் கலந்து கொள்கின்றனர். இதனால் சென்னை விழாக்கோலம் பூண்டுள்ளது.

Related Stories: