பொதுக்குழுவுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி மேல்முறையீடு

* இபிஎஸ் மீது ஐகோர்ட்டில் ஓபிஎஸ் ஆதரவாளர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

* இரு அணிகளும் நீதிமன்றத்தை நாடுவதால் அதிமுகவில் புதிய பரபரப்பு

சென்னை: அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டுமே நிறைவேற்ற வேண்டும் என்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதேநேரத்தில், பொதுக்குழுவில் கூடுதலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதால், ஓபிஎஸ் ஆதரவாளர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. இரு தரப்பினரும் நீதிமன்றத்தை நாடியுள்ளதால், அதிமுக தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளரும் பொதுக்குழு உறுப்பினருமான சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, ‘அதிமுக பொதுக்குழு திட்டமிட்டபடி நடத்தலாம். ஆனால், தீர்மானம் தொடர்பாக எந்தவொரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க இயலாது. மேலும் தீர்மானங்களை நிறைவேற்றவோ, புதிய தீர்மானங்களை கொண்டு வரவோ தடையில்லை’’ என உத்தரவிட்டு பொதுக்குழுவுக்கு தடைகோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்தார்.

இதையடுத்து, தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. உடனடியாக, விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு நள்ளிரவு வரையில் விசாரித்த உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு வழங்கிய உத்தரவில், ‘‘அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தை நடத்தலாம். ஆனால், மனுதாரர் தரப்பில் வைக்கப்பட்டுள்ள 23 தீர்மானங்களை மட்டுமே ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். இருப்பினும் மற்ற புதிய தீர்மானங்கள் குறித்து ஆலோசித்தாலும் அதுகுறித்த எந்த முடிவையும் எடுக்கக் கூடாது’’ என தெரிவித்தனர்.

தொடர்ந்து, கடந்த 23ம் தேதி நடத்தப்பட்ட அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானமும் நிராகரிக்கப்பட்டதால் கூட்டத்தின் பாதியிலேயே ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வெளியேறினர். இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்ற இரண்டு நீதிபதிகள் அமர்வின் உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் உச்ச நீதிமன்றத்தில் நேற்று மேல்முறையீட்டு மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில், ‘அதிமுகவில் நடப்பது உட்கட்சி விவகாரம் என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க அதிகாரம் இல்லை. அதனால், அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர வேறு எதனையும் நிறைவேற்றக் கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்’’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், வரும் 11ம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் இந்த மேல்முறையீட்டு மனுவை அவசர வழக்காக எடுத்து உச்ச நீதிமன்ற கோடைக்கால அமர்வு விசாரிக்கலாம் என தெரியவருகிறது. மேலும் இதே விவகாரத்தில் நேற்று முன்தினம் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், சென்னை உயர் நீதிமன்ற இரு நபர் அமர்வு பிறப்பித்த உத்தரவை மீறி பொதுக்குழுவில் புதிய தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதாக கூறி பொதுக்குழு உறுப்பினரும், ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவாளருமான சண்முகம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். அதில், அதிமுகவின் பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களை நிராகரித்து விட்டனர்.

பின்னர், கட்சியின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நிரந்தரமாக நியமிப்பதாக எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றுவதாக பொதுக்குழு உறுப்பினர்கள் ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் அறிவித்தனர். அவைத் தலைவரை நியமிக்கும் இந்த தீர்மானம், ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்களில் இடம் பெறவில்லை. நீதிமன்றம் விதித்த தடை உத்தரவை மீறி இவர்கள் செயல்பட்டுள்ளனர். அதுமட்டுமல்ல, அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்ற அறிவிப்பும் சட்டவிரோதமாக வெளியிட்டனர். பொதுக்குழு உறுப்பினர் சி.வி.சண்முகம், 23 தீர்மானங்களையும் பொதுக்குழுவில் ஒருமனதாக நிராகரிப்பதாக அறிவித்தார். கட்சிக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் கூறி அதற்கான கோரிக்கை மனுவை அவைத் தலைவரிடம் கொடுத்தார்.

இதேபோல, பொதுக்குழு உறுப்பினர் கே.பி.முனுசாமியும் செயல்பட்டார். பின்னர், கட்சியின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளையும் கலைத்து விட்டனர். எனவே, கட்சியின் நிரந்தர அவைத்தலைவராக தமிழ் மகன் உசேனை நியமித்து இயற்றப்பட்ட தீர்மானத்துக்கும், அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ம் தேதி நடைபெறும் என்று சட்டவிரோதமாக வெளியிடப்பட்ட அறிவிப்புக்கும் இடைக்கால தடை விதிக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை அவமதிக்கும் விதமாக செயல்பட்ட எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் மீது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது. எடப்பாடி பழனிசாமி தரப்பும், ஓ.பன்னீர்செல்வம் தரப்பும் நீதிமன்றங்களை நாடியுள்ளதால், இனி பிரச்னை நீதிமன்றங்களின் கைக்கு சென்று விட்டது.  இந்த வழக்கு நீண்டு கொண்டு, அதிமுக மற்றும் சின்னம் முடக்கம் வரை செல்லும் என்று தொண்டர்கள் அச்சம் அடைந்துள்ளனர். இது அதிமுகவில் புதிய பரபரப்பை உருவாக்கியுள்ளது.

* அதிமுகவில் நடப்பது உட்கட்சி விவகாரம் என்பதால் இதில் நீதிமன்றம் தலையிட்டு எந்த உத்தரவையும் பிறப்பிக்க அதிகாரம் இல்லை.

* அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர வேறு எதனையும் நிறைவேற்றக் கூடாது என்ற உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

* உயர் நீதிமன்ற அமர்வு பிறப்பித்த உத்தரவை மீறி பொதுக்குழுவில் புதிய தீர்மானம் இயற்றப்பட்டுள்ளதாக பொதுக்குழு உறுப்பினரும், ஓபிஎஸ் ஆதரவாளருமான சண்முகம், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

Related Stories: