அதிமுக பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றத்தில் எடப்பாடிபழனிசாமி தரப்பிற்கு எதிராக தீர்ப்பு வந்துள்ள நிலையில் தற்போது உச்சநீதிமன்றத்தில் மேலுறையீடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக அதிமுக பொதுக்குழு கடந்த 23-ம் தேதி முடிந்த நிலையில் அந்த பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் தவிர புதிதாக ஏதும் தீர்மானங்கள் நிறைவேற்றக்கூடாது, அதிமுக சட்டவிதிகளில் ஏதும் திருத்தம் கொண்டுவரக்கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

இந்நிலையில், 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அனைத்து தீர்மானங்களும்  நிராகரிக்கப்பட்டது. இது தவிர ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நேற்றைய தினம் ஓபிஎஸ் தரப்பு இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்தனர்.

இந்த சூழலில் தற்போது சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். குறிப்பாக பொது குழு, செயற்குழு விவகாரங்களில் நீதிமன்றங்கள் தலையிட அதிகாரம் இல்லை, பொதுக்குழு செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்தாது என மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று காலை முதல் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் இந்த மேல்முறையீடு தொடர்பாகவும், தேர்தல் ஆணையத்தில் பழனிச்சாமி தரப்பில் பதில்மனு தாக்கல் செய்வது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த சூழலில் தற்போது உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: