தெற்கு ரயில்வேயில் 4204 கிமீ மின்மயமாக்கல் 25000 வோல்ட் மின்சார பாதையில் கூடு கட்டும் ‘துணிச்சல்’ பறவைகள்

நெல்லை: தெற்கு ரயில்வேயில் 4 ஆயிரத்து 204 கிமீ ரயில்பாதைகள் இதுவரை மின்சார மயமாக்கப்பட்டுள்ளன. மின்சாரம் பாயும் மின்பாதையில் கூடு கட்டும் பறவைகளால் கண்காணிப்பு பணிகளை லைன்மேன்கள் தீவிரமாக மேற்கொள்ள வேண்டியதுள்ளது. தெற்கு ரயில்வேயில் 5 ஆயிரத்து 087 கிமீ ரயில் பாதையில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 83 சதவீத ரயில் பாதையான 4 ஆயிரத்து 204 கிமீ ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது.

இந்த மின் பாதைகளை ரயில்வே மின்பாதை பிரிவு பராமரிக்கிறது. ரயில்கள் இயக்க மின்சாரம் வழங்குவதை உறுதி செய்கிறது. மின்சார இன்ஜின்களை இயக்க 25000 வோல்ட் மின்சாரம் வழங்குவதற்கு உள்ள உப மின் நிலையங்களை பராமரிப்பதும் இந்த பிரிவின் வேலையாகும். ரயில்களை காலந்தவறாமல் இயக்க 24 மணி நேரமும் மின்பாதை ஊழியர்கள் விழிப்போடு இருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். மின் பாதையில் உள்ள பல்வேறு மின்சார வழங்கல் உபகரணங்களை மின்பாதை ஊழியர்கள் திறமையோடு கையாண்டு வருகின்றனர்.

தொடர் நவீனமயத்திற்கேற்ப தங்களை தயார் செய்து கொண்டுள்ளனர். குழுவாக பணியாற்றும் இவர்கள் பராமரிப்பிற்காக ‘‘டவர் வேகன்’’ எனும் ரயில் பாதையில் இயங்கும் சிறிய ரயில் பெட்டியை பயன்படுத்துகின்றனர். கோட்ட அலுவலகத்தில் உள்ள மின்பாதை கட்டுப்பாட்டு அறையில் இருந்தும் மின் பாதை செயல்பாடு கண்காணிக்கப்படுகிறது. தொலைதூரத்தில் மின் பழுது ஏற்பட்ட இடத்தை கண்டுபிடிப்பது, பழுது உள்ள இடத்தில் மின்சாரத்தை துண்டிப்பது போன்ற பணிகளை கோட்ட கட்டுப்பாட்டு அறையிலிருந்து மேற்கொள்ளப்படுகிறது.

மின்பாதைகளை பராமரிப்போருக்கு சமீபகாலமாக பறவைகளின் கூடு பெரும் சவாலாக இருந்து வருகிறது. மின் பாதையில் பறவைகள் கூடு கட்டுவது வழக்கம். இதனால் பழுது ஏற்பட்டு மின்சாரம் துண்டிக்கப்பட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளன. இதை கண்காணிக்க தினமும் ரயில் பாதையில் நடந்து செல்லும் ‘லைன்மேன்கள்’ பறவைக் கூடுகளை கவனமாக அகற்றி மின்பாதை பழுதை தவிர்த்து வருகின்றனர். விபத்து மற்றும் பருவநிலை மாற்றங்களால் ஏற்படும் மின் பாதை பழுதுகளை உடனுக்குடன் சென்று சரி செய்து ரயில் போக்குவரத்து தாமதம் இல்லாமல் செயல்பட உதவி வருகின்றனர்.

Related Stories: