குடும்ப தகராறில் விபரீதம் பெண் இன்ஸ்பெக்டருக்கு கம்பியால் அடி கணவருக்கு கட்டையால் அடி கோவையில் பரபரப்பு

கோவை: கோவை பாலசுந்தரம் ரோட்டில் உள்ள போலீஸ் குடியிருப்பில் வசித்து வருபவர் வீரம்மாள் (46). இவர் நீலகிரி மாவட்ட காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இதற்கு முன்பு அவர் கோவை போக்குவரத்து புலனாய்வு பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். இவரது கணவர் சரவணன் (56). இவர் வீரப்பனூரில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பிரிவில் துறைத்தலைவராக உள்ளார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்நிலையில், கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதேபோல், நேற்று போலீஸ் குடியிருப்பில் உள்ள வீட்டில் மீண்டும் அவர்களுக்கிடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது, ஆத்திரமடைந்த சரவணன் தகாத வார்த்தைகளால் பேசி இன்ஸ்பெக்டர் வீரம்மாளை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளார். இதில், அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டது. சத்தம் கேட்டு அங்கிருந்தவர்கள் வந்து அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இது குறித்து ரேஸ்கோஸ் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், போலீசார் தாக்குதல், பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் சரவணன் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர். இதேபோல், இருவருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்னையில் தனது மனைவி வீரம்மாள் தன்னை கட்டையால் தாக்கியதில் எனக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது என சரவணனும் ரேஸ்கோஸ் போலீசில் புகார் அளித்தார்.

புகாரின் பேரில், போலீசார் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மீதும் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். காயமடைந்த இருவரும் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். குடும்ப தகராறில் பெண் இன்ஸ்பெக்டர் தாக்கப்பட்ட சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: