ஜூன் 23-ல் நடந்த அதிமுக பொதுக்குழு நடைபெற்ற விவகாரம்...ஈபிஎஸ்-க்கு எதிராக ஓபிஎஸ் சார்பில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல்

சென்னை: ஜூன் 23-ல் நடந்த அதிமுக பொதுக்குழு தொடர்பாக ஓபிஎஸ் சார்பில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். பொதுக்குழுவில் உயர்நீதிமன்ற உத்தரவு மீறப்பட்டதாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவர் தொடுத்துள்ளார்.

கடந்த 23-ம் தேதி அதிமுக பொதுக்குழு நடைபெற்றது. அதற்கு முன்தினம் அதிமுக பொதுக்குழுவிற்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரரித்த நீதிபதிகள் அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்தார்.

அதனையடுத்து, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீடு செய்தார். இதையடுத்து  இந்த வழக்கை அன்று நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு நள்ளிரவில் விடிய விடிய விசாரணை நடத்தினர். அப்போது அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு தடையில்லை. அதிமுக பொதுக்குழு-வில் 23 தீர்மானங்களை தவிர புதிய தீர்மானங்கள் நிறைவேற்றக் கூடாது என தெரிவித்து இருந்தனர்.

இதனைத்தொடர்ந்து பொதுக்குழு நடைபெற்றது. அதில் அவைத்தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டார். பின்னர் 23 தீர்மானங்களும் ரத்து செய்யப்பட்டது. மேலும் ஜூலை 11-ம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு கூடும் என அறிவித்தனர்.

இந்தநிலையில் இன்று, பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் ஐகோர்ட்டில் அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதாவது, உயர்நீதிமன்றம் அனுமதித்த தீர்மானங்களை அதிமுக பொதுக்குழு நிராகரித்தது நீதிமன்ற அவமதிப்பு. அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் நியமனம், ஒன்றைத் தலைமை மனுவை அளித்ததும் நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல் என மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதனையடுத்து, ஜூலை 11-ம் தேதி மீண்டும் அதிமுக பொதுக்குழு நடைபெறும் என அறிவிக்கப்பட்டதும் நீதிமன்ற அவமதிப்பு. பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வில் விரைவில் விசாரணைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories: