அரசுக்கு நிதி சுமையால் மாநகராட்சிகளில் காலி பணியிடம் நிரப்புவதில் காலதாமதம்: அமைச்சர் கே.என்.நேரு பேட்டி

புதுக்கோட்டை: அரசுக்கு நிதிச்சுமை ஏற்பட்டுள்ளதால் நகராட்சி, மாநகராட்சிகளில் காலி பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்தார். புதுக்கோட்டையில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு நேற்று  அளித்த பேட்டி: தமிழகத்தில் பத்தாண்டு காலமாக நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் எந்த விதமான அடிப்படை வசதிகளையும் அப்போதைய அரசு ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு தமிழக முதல்வர், கலைஞர் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கு ஆயிரம் கோடி ரூபாய் சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். இந்த ஆண்டும் ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளார். அதுமட்டுமில்லாமல் நமக்கு நாமே திட்டத்தின் கீழ், 400 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதனைக் கொண்டு நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் அவசர பணிகள் மற்றும் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகிறது.

நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பணியாளர்கள் பற்றாக்குறை நிலவி வருவது தெரிகிறது. இருந்த போதிலும் தமிழக அரசு மிகப்பெரிய நிதி சுமையால் உள்ளதால் காலிப்பணியிடங்களை நிரப்புவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது. நிதி சுமை சீரானதும் அது பற்றி பரிசீலனை செய்து தேவையான இடங்களில் பணியாளர் நிரப்பப்படும். இதற்கிடையில் தேவையான இடங்களில் பொறியாளர் பணியிடங்களை நிரப்ப கருத்துரு கோரப்பட்டுள்ளது. தமிழக முதலமைச்சரின் அனுமதி பெற்று தேவைக்கு ஏற்ப அந்த பணியிடங்கள் நிரப்பப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: