கோவையில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு: வாகன ஓட்டிகள் அவதி

கோவை: கோவை நகர் மற்றும் புறநகர் பகுதியில் செயல்படும் பெட்ரோல் பங்குகளில் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் மாற்றி அமைத்து வருகின்றன. கடந்த மே மாதம் 21ம் தேதி பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்தது. அதன்படி, கோவையில் பெட்ரோல் லிட்டருக்கு 103.08-க்கும், ஸ்பீடு பெட்ரோல் லிட்டருக்கு ரூ.105.54-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. டீசல் லிட்டருக்கு 94.70. விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 34 நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை. விலையில் மாற்றம் செய்யாத காரணத்தினால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் சற்றே நிம்மதி அடைந்துள்ளனர்.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக கோவை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த திடீர் தட்டுப்பாடு காரணமாக வாகன ஓட்டிகள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். லாரி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

எண்ணெய் நிறுவனங்கள் கிரெடிட் அடிப்படையில் பெரிய பெட்ரோல் பங்குகளுக்கு பெட்ரோல், டீசலை வழங்கி வந்த நிலையில், தற்போது கடன் கிடையாது என தெரிவித்துள்ளது. தவிர, தேவையான அளவு பெட்ரோல், டீசலை வழங்குவது இல்லை எனவும், 25 சதவீதம் கூட பெட்ரோல், டீசலை எண்ணெய் நிறுவனங்கள் தர மறுப்பதால் பெட்ரோல் பங்குகளில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பங்க் உரிமையாளர்கள் கூறுகின்றனர். கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செயல்படும் பெட்ரோல் பங்குகளில் கடுமையான டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

பெட்ரோலும் இருசக்கர வாகனங்களுக்கு அதிகபட்சமாக ரூ.300-க்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. கார்களுக்கு ரூ.500 வரை அளிக்கப்படுகிறது. தவிர, ஒரு சில பங்குகளில் பெட்ரோல், டீசல் இல்லை என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால், அடுத்த சில வாரங்களில் கடுமையான பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்பு இருக்கிறது என பங்கு உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். எண்ணெய் நிறுவனங்கள் சரிவர சப்ளை செய்தால் மட்டுமே இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: