ஜூலை 9ல் நெல்லையப்பர் கோயில் தேரோட்டம் சுவாமி தேரின் அலங்கார குதிரை, யாழி வர்ணம் தீட்டி புதுப்பிப்பு

நெல்லை: தமிழகத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயங்களில்  ஒன்றான நெல்லையப்பர் - காந்திமதி அம்பாள் கோயிலில் கொரோனா பரவலால் கடந்த இரு 2 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆனி பெருந்திருவிழா ஜூலை 3ம் தேதி சுவாமி சன்னதியில் தங்க கொடிமரத்தில் கொடியேற்றத்துடன்  துவங்குகிறது. தொடர்ந்து ஜூலை 11ம் தேதி தேரோட்டம் நடக்கிறது. இதில் சுவாமி, அம்பாள் உள்ளிட்ட 5 தேர்களை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து நிலையம் சேர்க்கின்றனர்.

 இதை முன்னிட்டு தேர்கள்  பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டிருந்த கூரைகள் பிரிக்கப்பட்டு,  சுத்தப்படுத்தும் பணி நடந்து வருகிறது. தமிழகத்தின் 3வது பெரிய தேர் என்ற சிறப்பை பெற்ற  சுவாமி நெல்லையப்பர் தேரின் எடை 450 டன். உயரம் 80 அடியாகும். இத்தேரின் முகப்பில் 4 பெரிய குதிரைகளை பிரம்மதேவன் செலுத்துவது போன்ற மர சிற்பங்கள் பொருத்தி அழகுபடுத்தப்படும். மேலும் யாழிகள், துவார பாலகர்கள் உள்ள மர சிற்பங்களும் சுவாமி தேரில் அலங்கரித்து வைக்கப்படும்.

இதற்காக நெல்லையப்பர் கோயில் ஆயிரங்கால் மண்டபத்தில் குதிரைகள், யாழிகள், பிரம்மதேவன், துவாரபாலகர்கள் மரச்சிற்பங்கள் பல வண்ணங்களில் வர்ணம் தீட்டும் பணி கடந்த சில நாட்களாக நடந்து வருகிறது. தேரோட்டத்தில் சுப்பிரமணியர் தேருக்கும், 4 குதிரைகள் பொருத்தி தேரோட்டம் நடத்தவும் கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஜூலை 1ம்தேதி சுவாமி தேரினை தீயணைப்பு வாகனம் மூலம் தண்ணீர் பீச்சியடித்து சுத்தப்படுத்தும் பணி நடைபெறும்.  இதைத் தொடர்ந்து தேர்  அலங்கார தட்டுகளுக்கு அலங்கார பதாகைகள், தேரில் குதிரைகள், யாழிகள், துவார  பாலகர்கள் உள்ளிட்ட அலங்கார பொம்மைகள் பொருத்தி தேரோட்டத்துக்கு தயார்படுத்தப்படும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: