2030ல் தமிழகத்தின் பொருளாதாரம் 1 டிரில்லியன் அமெரிக்க டாலர்: மேம்பட்ட உற்பத்தி மாநாட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

சென்னை: 2030ம் ஆண்டில் நமது மாநிலத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக வளர்ச்சி அடைய செய்ய வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தரமணி டைட்டல் பார்க்கில் தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி மாநாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. மாநாட்டில் மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம், ஓசூர் மற்றும் பெரும்புதூர் பூங்காக்களில் சிப்காட் தொழில் புத்தாக்க மையங்கள் துவக்கி வைத்து, திருப்பூர் மற்றும் விழுப்புரத்தில் டைடல் நியோ பூங்காவிற்கு அடிக்கல் நாட்டி, நான்காம் தலைமுறை தொழில் வளர்ச்சி முதிர்வு கணக்கெடுப்பை முதல்வர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.  மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கிய திராவிட மாடல் ஆட்சி தமிழகத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அனைத்து துறையின் வளர்ச்சி, அனைத்து சமூகத்தின் வளர்ச்சி, அனைத்து மாவட்டத்தின் வளர்ச்சி என்பதை உள்ளடக்கிய இந்த திராவிட மாடல் வளர்ச்சி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொண்டாக வேண்டும். இதில் தொழில்துறையின் பங்களிப்பு மிகமிக முக்கியமானதாக இருப்பதை நான் சொல்லி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டியது இல்லை. ஏனென்றால் தொழில்துறையானது மிக சிறப்பாக செயல்பட்டுகொண்டிருக்கிறது. இதற்கு காரணமாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, முருகானந்தம் ஐ.ஏ.எஸ், கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் மற்றும் அதிகாரிகளையும் பாராட்ட கடமைப்பட்டுள்ளேன். மேம்பட்ட உற்பத்தி மையம் தொடர்பான மாநாடாக இது உள்ளது. நான்காம் தலைமுறையின் தொழில்வளர்ச்சிக்கு நம்மை தயார் படுத்திக்கொள்ள வேண்டிய நேரம் இது. அந்த இலக்கை நாம் எட்டுவோம். தற்போதுள்ள தொழிற்சாலைகளை மேம்படுத்த வேண்டும்.  

அவற்றை ஸ்மார்ட் தொழிற்சாலைகளாக உருவாக்க வேண்டும். இதனால், உற்பத்தி பலமடங்கு அதிகரிக்கும். 295 மில்லியன் அமெரிக்க டாலர் உள்நாட்டு உற்பத்தி என்ற வகையில் அகில இந்திய அளவில் 2வது மிகப்பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்துகொண்டிருக்கிறது. உற்பத்தியில் அகில இந்திய அளவில் மட்டும் இல்லாமல் தெற்காசியாவில் தலைசிறந்த இடத்தில் தமிழ்நாடு பெற்றுள்ளது. இவற்றோடு நாம் மனநிறைவு அடைந்து விடாமல் 2030ம் ஆண்டில் நமது மாநிலத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக வளர்ச்சி அடைய செய்ய வேண்டும். அந்த பாதையில் நமது அரசு வெற்றிகரமாக பயணத்தை மேற்கொண்டு வருகிறது. நமது இளைஞர்கள் படிப்பில்,சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதை முக்கிய நோக்கமாக கொண்டு நான் முதல்வர் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இளைஞர்கள் வேலை பெறும் திறனை அதிகரிக்கக்கூடிய திட்டம் தான் இந்த திட்டம். தமிழ்நாடு தொழில்வளர்ச்சி நிறுவனம், சிப்காட், டான்சிட்கோ போன்ற அரசு பொதுத்துறை நிறுவனங்களோடு இணைந்து மாநிலத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் தங்களது வளாகங்களில் ஆராய்ச்சி பூங்காக்கள் நிறுவ ஊக்குவிக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

அதன்படி அறிவுசார் ஆராய்ச்சி பூங்கா பாரதியார் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்படும் என்று நான் அறிவித்துள்ளேன். உலக அளவிலான நான்காம் தலைமுறை தொழில்வளர்ச்சிக்கான திட்டக்கூறுகளை வழிநடத்துவது மட்டும் இன்றி தமிழ்நாட்டின் வெற்றிபாதையை உலகத்திற்கு வெளிச்சமிட்டு காட்டுவதற்கும் இது ஏதுவாக அமையும். சூரிய எரிசக்தி, மின்னணுவியல், மின் வாகனங்கள், வான்வெளி பாதுகாப்பு, கூட்டு உற்பத்தி, முப்பரிமாண வடிவமைப்பு மற்றும் அச்சிடுதல் ஆகியவை புதிய தொழில் வாய்ப்பு உள்ள துறைகளாக உள்ளது. இத்துறைகளின் மேம்பட்ட தொழில்நுட்பத்தையும், தொழில்முறை 4.0 தரத்தையும் அறிமுகப்படுத்தி தமிழகத்தின் தொழில்முறைக்கு ஏற்ப செயல்படுத்துவது நமது தொழில்சூழலை மேலும் செம்மைப்படுத்த வழிவகுக்கும் என நம்புகிறேன். மேம்பட்ட உற்பத்தியை பொறுத்தவரையில் தமிழகம் புதிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. சிறு,குறு நடுத்தர தொழில் நிறுவனங்களை தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்றவாறு தயார்படுத்திட வேண்டும் என்பதில் அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதற்கென மாணவர்கள், தொழில்வல்லுநர்கள், வளம் தொழில் முனைவோருக்கு அதிநவீன மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பம் அளித்திட அரசு முனைந்துள்ளது.

தொழில்முனைவோர்களின் படிப்புக்கு இடையூறு இல்லாமல் பயிற்சி அளிக்கப்படும். புதிய பொருட்களின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு சிறந்த பயிற்சியாளருக்கும் சூழல் அமைப்பு அமைத்து கொடுக்கப்படும். தொழில்துறையினருக்கு சாதகமான களம் அமைத்துத் தரப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் துறையினருக்கு சிக்கல்களை தீர்ப்பதற்கான உத்திகளுக்கு புதுப்புது திட்டப்பணிகளுக்கு வழிவகை செய்துதரப்படும். டிட்கோ நிறுவனம் ஜெர்மன் நாட்டை சேர்ந்த பன்னாட்டு நிறுவனமான சீமன்சுடன் இணைந்து தமிழ்நாடு மின்னணுமயமாக்கப்பட்ட மேம்பட்ட உற்பத்தி மையம் மற்றும் அமெரிக்க பன்னாட்டு நிறுவனத்துடன் இணைந்து தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்திக்கான திறன்மிகு மையம் அமைக்கும் பணி முடிக்கப்பட்டு விரைவில் தொடக்கிவைக்கப்பட உள்ளது.

ஸ்ரீபெரும்பதூர் மற்றும் ஓசூர் சிப்காட் தொழிற் பூங்காக்களில் 33.46 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள தொழில் புத்தாக்க பூங்காக்கள் இன்று துவக்கிவைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள இரண்டாம் மற்றும் மூன்றாம் அடுக்கு நகரங்ளில் மினி அடுக்கு பூங்காக்கள் அமைக்கப்படும் என அறிவித்திருந்தேன். அதன் அடிப்படையில் திருப்பூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் மினி டைடல் பூங்காக்கல் அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. இது செயல்பட தொடங்கும் போது பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு அவர்களது மாவட்டத்திலேயே வேலைவாய்ப்பு கிடைக்கும். தொழில்துறை மட்டும் இன்றி தமிழ்நாட்டை சேர்ந்த பிற துறைகளும் மேம்பட்ட உற்பத்தியை மாநிலத்திற்கு கொண்டுவர கூட்டு முயற்சியை மேற்கொண்டு வருகின்றன. 4ம் தலைமுறை தொழில் வளர்ச்சியினால் ஏற்பட உள்ள தொடர் மாற்றங்களை நமது தொழிலாளர்கள் சுலபமாக கையாள முடியும். இதை கருத்தில் கொண்டு டிஜிட்டல் சேவைகள் துறை தமிழ்நாடு மின்னணு நிறுவனத்துடன் இணைந்து குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஆதரவு அளித்திடவும், துறையினரின் பிரச்னைகள் மற்றும் சவால்களை தீர்த்திட வளர் 4.0 இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. 4ம் தலைமுறை தொழில்வளர்ச்சிக்கு தயார்நிலைபடுத்தி கொள்வதற்கான அரசின் முயற்சிகளில் நீங்களும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Related Stories: