உத்திரமேரூர் - புக்கத்துறை இடையே ரூ54 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை பணிகள் துவக்கம்: எம்பி, எம்எல்ஏ அடிக்கால் நாட்டினர்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் - புக்கத்துறை இடையே, ரூ 54 கோடி மதிப்பீட்டில் 4 வழிச்சாலை அமைக்கும் பணிகளை எம்எல்ஏ சுந்தர், எம்பி செல்வம் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தனர்.காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து செங்கல்பட்டு, சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்கு தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மேலும், சென்னையிலிருந்து திருவண்ணாமலை, வந்தவாசி, செய்யாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் முதல் பல்வேறு வாகனங்கள் இரு வழிச்சாலையாக உள்ள இந்த உத்திரமேரூர் சாலை வழியாக சென்று வருகின்றன. நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வாகனங்கள் எண்ணிக்கையால் காலை, மாலை வேலைக்கு செல்வோர் மற்றும் விழாக்காலங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்படும் சூழல் நிலவியது. மேலும், அவ்வப்போது விபத்துக்களும் நிகழ்ந்த வண்ணம் இருந்து வந்தது.எனவே,  இந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றி தர பொதுமக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், பொதுமக்கள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு உத்திரமேரூர் -  புக்கத்துறை சாலையில்  7.2  கி.மீ தொலைவிற்கு முதலமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ 54 கோடியே 35 லட்சம் மதிப்பீடு இருபுறமும் மழைநீர் கால்வாய் உடன் கூடிய நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிக்கான பூமி பூஜை துவக்க விழா நேற்று நடைபெற்றது.

விழாவில்,  உத்திரமேரூர் ஒன்றிய பெருந்தலைவர்  ஹேமலதா ஞானசேகரன் தலைமை தாங்கினார். துணை பெருந்தலைவர் வசந்திகுமார், நெடுஞ்சாலை துறை கோட்டப் பொறியாளர் நிர்மலா, உதவி கோட்ட பொறியாளர் அனந்தகல்யாணராமன், உதவி பொறியாளர் சுஜிதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரூராட்சி தலைவர் பொன்.சசிகுமார் அனைவரையும் வரவேற்றார். நிகழ்ச்சியில், காஞ்சி திமுக தெற்கு மாவட்ட செயலாளர் க.சுந்தர் எம்.எல்.ஏ மற்றும் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி.செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டி வைத்தனர். மேலும், நான்கு வழிச்சாலை பணியினை கொடியசைத்து துவக்கி வைத்தனர் நிகழ்வின்போது நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: