கவுண்டமாநதியில் 3ம் கட்ட தூர்வாரும் பணி ஜரூர்

திருமங்கலம்: திருமங்கலம் கவுண்டமாநதியில் மூன்றாம் கட்ட தூர்வாரும் பணி விறுவிறுப்படைந்துள்ளது.மதுரை மாவட்டம், எழுமலை அருகே மேற்குத்தொர்ச்சி மலைப்பகுதியில் உற்பத்தியாகி சௌடார்பட்டி, அரசபட்டி, குராயூர் வழியாக காரியாபட்டி அருகே குண்டாற்றில் இணைகிறது கவுண்டமாநதி. இந்த நதி நீர் மூலம் உசிலம்பட்டி, சேடபட்டி, திருமங்கலம், கள்ளிக்குடி பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் பயன் பெற்று வந்தனர். ஆனால் தொடர்ஆக்கிரமைப்புகளால் கவுண்டமாநதி தனது பொழிவை இழந்து காட்சியளித்தது. இதனை தொடர்ந்து கடந்த அதிமுக ஆட்சியில் கவுண்டமாநதியை தூர்வார நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் துவங்கின. இதையொட்டி முதற்கட்டமாக திருமங்கலம் சௌடார்பட்டி - திரளி வரையில் நதியை தூர்வாரும் பணிகள் ரூ.3 கோடி மதிப்பீட்டில் முடிக்கப்பட்டது. தொடர்ந்து கள்ளிக்குடி ஒன்றியத்திற்குட்பட்ட அரசபட்டி - குராயூர் இடையே 6 கி.மீ தூரம் ரூ.3 கோடியில் தூர்வாரப்பட்டது.

இந்த இரண்டு பகுதிக்கும் இடைப்பட்ட திரளி - அரசப்பட்டி பகுதியில் தூர்வாரும் பணி அப்போது நடைபெறவில்லை. நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் கவுண்டமாநதி தூர்வாரும் பணி நிறைவடையவில்லை. இந்நிலையில் தமிழகத்தில் ஆட்சிமாற்றம் ஏற்பட்டு, திமுக ஆட்சிக்கு வந்த பின்னர், திரளி-அரசப்பட்டி பகுதியிடையே கவுண்டமாநதியில் தூர்வாரும் பணிகள் தற்போது துவங்கி நடந்து வருகிறது. ரூ.2 கோடியே 50 லட்சத்தில் பணிகள் நடந்து வருகின்றன. இதில் ஆலம்பட்டி அருகே ஒரு தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் பணிகள் நிறைவடையும் என பொதுப்பணித்துறையினர் தெரிவித்தனர். இதனால் மீண்டும் தனது பொழிவை கவுண்டமாநதி பெறும் என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். அதே நேரத்தில் தூர்வாரிய நதியில் ஆக்கிரமைப்புகளை செய்யவிடாமல் தடுக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதே அனைத்து தரப்பு மக்களின் விருப்பமாகும்.

Related Stories: