திருவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் புலிகளை கணக்கெடுக்க 300 இடங்களில் கேமரா பொருத்தும் பணி துவங்கியது

திருவில்லிபுத்தூர்: திருவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் புலிகளை கணக்கெடுக்க சுமார் 300 இடங்களில் அதிநவீன கேமரா பொருத்தும் பணி துவங்கியுள்ளது.

திருவில்லிபுத்தூர் அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலையில் ஏராளமான புலிகள் வசித்து வருகின்றன. இந்த புலிகளின் எண்ணிக்கையை அறிந்துகொள்ளும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் கேமரா பொருத்தி வனத்துறையினர் அதன் எண்ணிக்கையை அறிந்து வருகின்றனர். அந்த வகையில், இந்த ஆண்டு புலிகள் எண்ணிக்கையை அறிய கேமரா பொருத்தும் பணி நேற்று முதல் துவங்கியது.

இதற்காக கடந்த சில தினங்களாக வனத்துறையினருக்கு கேமரா பொருத்துவது, புலிகள் இருக்கும் இடங்களைத் தேர்வு செய்வது எப்படி என்பது குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. அதனடிப்படையில் புலிகள் இருக்கும் இடங்களில் கேமரா பொருத்தும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக மேற்கு தொடர்ச்சி மலையில் 300 இடங்களை தேர்வு செய்து, சத்தியமங்கலம், முதுமலை ஆகிய பகுதிகளிலிருந்து வந்த கேமராவை வனத்துறையினர் வனப்பகுதியில் தங்கியிருந்து பொருத்தி வருகின்றனர். வனத்துறையினருடன் கல்லூரி மாணவர்களும் இந்த புலிகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் புலிகள் கணக்கெடுப்பிற்காக பொருத்தப்படும் கேமராக்களை வனவிலங்குகள் ஏதும் சேதப்படுத்தி விடக்கூடாது என்பதற்காக, கேமரா பொருத்தப்பட்ட இடங்களில் அடிக்கடி சென்று கேமராவை ஆய்வு செய்ய திருவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலிப் குமார் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் குறிப்பிட்ட சில நாட்கள் இடைவெளிவிட்டு கேமராவை கண்காணிக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட முடிவு செய்துள்ளனர்.

Related Stories: