முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேரறிவாளன் அவரது குடும்பத்தினர் சந்திப்பு: முதலமைச்சர் எங்களை ரொம்ப மகிழ்ச்சியா வரவேற்றாரு; சந்திப்புக்கு பின் அற்புதம் அம்மாள் பேட்டி

சென்னை: சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடன் பேரறிவாளன் அவரது குடும்பத்தினர் சந்தித்தனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து பேரறிவாளன் அவரது குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர். பேரறிவாளன் விடுதலை பெற்ற மகிழ்ச்சியை முதல்வருடன் பகிர்ந்துகொண்டனர். ஜோலார்பேட்டையில் இருந்து பேரறிவாறன் மற்றும் அவரது தாயார் மற்றும் அவரது குடும்பத்தினர் இன்று மாலை சென்னை வந்தனர். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தண்டனை அனுபவித்த பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து இன்று உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பை பல்வேறு தரப்பினரும் வரவேற்றுள்ளனர். ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இனிப்பு வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மேலும், தனது விடுதலைக்காக போராடிய அனைவருக்கும் நன்றி தெரிவித்தார். தனது விடுதலைக்காக போராடிய அனைவரையும், வாய்ப்பு கிடைக்கும்போது நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க உள்ளதாக கூறினார். முதலமைச்சருடனான சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது. அவருக்கு நன்றி தெரிவித்தேன் என கூறினார். குடும்பத்தின் சூழ்நிலை குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார் என தெரிவித்தார். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து உதவிகளையும் செய்வதாக முதலமைச்சர் உறுதி அளித்தார் என கூறினார். முதலமைச்சர் எங்களை ரொம்ப மகிழ்ச்சியா வரவேற்றாரு.. இயல்பா பேசினாரு என அற்புதம் அம்மாள் பேட்டியளித்தார். பேரறிவாளன் சிறையில் 31 ஆண்டுகள் இருந்தார். மீண்டும் சிறை செல்லாமல் இருக்க பார்த்துக் கொள்ளுங்கள் எனவும் அற்புதம்மாள் முதல்வரிடம் கோரிக்கை வைத்தார்.

Related Stories: