சென்னை அருகே போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரு.25 கோடி பச்சை கல் சிவலிங்கம் குடந்தை கோர்ட்டில் ஒப்படைப்பு: சிக்கிய 2 பேர் சிறையிலடைப்பு

கும்பகோணம்: சென்னை பூந்தமல்லி அருகே பழமையான உலோக நாகாபரணத்துடன் கூடிய பச்சைக்கல் சிவலிங்கம் பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்படி நேற்று சிலை திருட்டு தடுப்பு பிரிவு ஏடிஜிபி ஜெயந்த்முரளி உத்தரவின் பேரில்,  ஏடிஎஸ்பி ராஜாராம் தலைமையில் டிஎஸ்பி கதிரவன் உள்ளிட்ட தனிப்படையினர் விரைந்தனர். கடத்தல்காரர்களிடம் சிலை வாங்க செல்லும் வியாபாரிகளை போல அணுகினர். சிவலிங்கத்தின் விலை ரூ.25 கோடி என கடத்தல்காரர்கள் கூறினர். இதையடுத்து, அவர்கள் சிலையை காண்பித்தவுடன், சென்னை வெள்ளவேடு புது காலனியை சேர்ந்த பக்தவச்சலம் (எ) பாலா (46) மற்றும் சென்னை புதுச்சத்திரம் கூடப்பாக்கம் கலெக்டர் நகரை சேர்ந்த பாக்கியராஜ் (42) ஆகியோரிடம் இருந்து பச்சைக்கல் லிங்கத்துடன் கூடிய நாகாபரணம் சிலையை பறிமுதல் செய்து கைது செய்தனர்.

தொடர்ந்து சிலை திருட்டு தொடர்பான வழக்குகள் நடைபெறும் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில், கைப்பற்றப்பட்ட சிலையை நேற்று மாலை ஒப்படைத்து, கைது செய்யப்பட்ட 2 பேரையும் நீதிபதி சண்முகப்பிரியா முன்பு ஆஜர்படுத்தினர். நீதிபதியின் உத்தரவின் பேரில் குற்றவாளிகள் இருவரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். கும்பகோணம் நாகேஸ்வரன் கோயிலில் உள்ள சிலைகள் பாதுகாப்பு மையத்தில் பச்சைக்கல் சிவலிங்கம் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. இது தொன்மையான சிவலிங்கம் தானா என்பது குறித்து  வல்லுனர்களிடம் அறிக்கை கேட்கப்பட்டுள்ளது. அதற்கு பிறகே இச்சிலைக்கான தொன்மையும், அதன் உண்மையான மதிப்பும் தெரியவரும்.

Related Stories: