இரும்புக் கம்பிகள் இளமையைத் தின்று தீர்த்தபிறகு ஒரு மனிதன் வெளியே வருகிறான்: பேரறிவாளன் விடுதலை குறித்து கவிஞர் வைரமுத்து, ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் வாழ்த்து..!!

சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்த தீர்ப்பை வரவேற்கும் வகையில் தமிழகம் முழுவதும் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். தலைவர்கள் பலரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில்,

மனிதநேய மக்கள் கட்சி ஜவாஹிருல்லா:

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஆளுநரின் எதேச்சதிகார போக்கிற்கு குட்டு என்று ஜவாஹிருல்லா தெரிவித்துள்ளார். 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடிய பேரறிவாளனை இன்று உச்சநீதிமன்றம் விடுதலை செய்துள்ளதை மனிதநேய மக்கள் கட்சி வரவேற்கின்றது. அமைச்சரவையின் முடிவுக்கு ஒப்புதல் அளிப்பது மட்டும் தான் ஆளுநரின் பணி என்பதை தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது. 20 ஆண்டுகள் சிறையில் உள்ளவர்களை விடுவிக்க மாநில அரசுக்கு அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பு சுட்டிக்காட்டியுள்ளது. தீர்ப்பிலிருந்து படிப்பினை பெற்று தமிழ்நாடு அமைச்சரவை முடிவுகளுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன்:

பேரறிவாளன் விடுதலை குறித்து மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், ஆயுள்தண்டனையைக் காட்டிலும் நீண்ட 31 ஆண்டுகள். இப்போதேனும் முடிந்ததே என மகிழ்கிறோம் தெரிவித்துள்ளார். பேரறிவாளனுக்கான அநீதியில் அரசுகள் பந்து விளையாடிய சூழலில், நீதிமன்றமே முன்வந்து விடுதலை செய்திருக்கிறது. வென்றது நீதியும் அற்புதம் அன்னையின் போர்க்குணமும் எனவும் கூறியுள்ளார்.

நடிகை குஷ்பூ:

மகனுக்கான ஒரு தாயின் போராட்டம் வென்றுள்ளது என பேரறிவாளன் விடுதலை குறித்து நடிகை குஷ்பூ தெரிவித்துள்ளார். உண்மையிலேயே தன் மகனுக்காக எல்லா அமைப்புகளுக்கும் எதிராகப் போராடிய தாயின் எழுச்சியூட்டும் கதை இது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

டிடிவி தினகரன்:

பேரறிவாளன் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு வரவேற்கதக்கது என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அற்புதம்மாள் என்ற தாய் நீதிமன்றத்தின் நெடிய படிக்கட்டுகளில் நீண்டகாலம் நடத்திய சட்டப்போராட்டம் வெற்றி பெற்றிருக்கிறது. ஆளுநர் போன்ற பதவியிலிருப்பவர்கள் மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் முடிவை மதித்து செயல்படவேண்டியதன் அவசியத்தை இத்தீர்ப்பு உறுதிப்படுத்தியிருப்பது பாராட்டுக்குரியது. தாமதிக்கப்பட்ட நீதி; மறுக்கப்பட்ட நீதி என்பதை உணர்ந்து எதிர்காலத்திலாவது இத்தகைய பிரச்னைகளில் அதிகாரத்தில் இருப்பவர்கள் உரிய நேரத்தில் முடிவெடுக்கவேண்டும். பேரறிவாளனைத் தொடர்ந்து எஞ்சிய 6 தமிழர்களும் விரைவில் விடுதலை செய்யப்படவேண்டும் எனவும் கூறினார்.

இயக்குநர் பாரதிராஜா:

தம்பி பேரறிவாளன் விடுதலை மிகப்பெரும் மகிழ்ச்சி என இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார். பேரறிவாளன் விடுதலையை தொடர்ந்து மற்ற 6 உறவுகளையும் உடனே விடுதலை செய்ய தமிழக அரசு அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

கவிஞர் வைரமுத்து:

இரும்புக் கம்பிகள்

இளமையைத் தின்று தீர்த்தபிறகு

ஒரு மனிதன் வெளியே வருகிறான்

தமிழ்நாட்டு அரசுக்கும்

உச்ச நீதிமன்றத்திற்கும்

வணக்கம்

பேரறிவாளனுக்குத் திறந்த

அதே வாசல் வழியே

சம்பந்தப்பட்ட ஏனையோரும்

வெளிவருமாறு

வெளிவர வேண்டும்

நீதிமன்றத்தின் நிமிர்ந்த தீர்ப்பு

என்று கவிஞர் வைரமுத்து தனது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: